குரு பார்க்க கோடி நன்மை... யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும்?

Published on 2016-07-24 11:49:25

குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்­திற்கு தான் நன்மை அதிகம் தருவார். குரு­ப­கவான் தான் இருக்கும் இடத்­தி­லி­ருந்து 5,7, 9 ஆகிய இடங்­களை பார்வை செய்­கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்­ப­லன்­களை கொடுப்­ப­தில்லை என்­றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்­ற­மான நிலையை பெறு­கி­றது.

குரு பார்க்க கோடி புண்­ணியம் என்­பது நம் ஆன்றோர் வாக்கு. எத்­த­கைய தோஷம் இருந்­தாலும் குரு பார்த்தால் வில­கி­விடும். லக்­னத்தில் குரு இருப்­பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்­னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்­பதாம் இடங்­க­ளுக்கு விழும். ஆகையால் இந்த ஸ்தானங்­களின் பலம் விருத்­தி­யாகும்.

நவ­க்கி­ரகங்­களில் மிகவும் முக்­கிய யோக கிர­க­மாக கரு­தப்­ப­டு­வது குரு ஆகும். ஜோதி­டத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்­சிகள் முக்­கிய அம்­ச­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

இந்த நிலையில், துர்­முகி ஆண்டு ஆடி மாதம் 18 ஆம் நாள், அதா­வது ஆகஸ்ட் 2ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை அன்று, பூசம் நட்­சத்­திரம், அமா­வாசை திதி சித்த யோகம் கூடிய சுப­தி­னத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசி­யி­லி­ருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடை­கின்றார்.

இந்த குரு பெயர்ச்சி மூலம், ரிஷபம், சிம்மம், விருச்­சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகள் மிகவும் யோகம் அடை­கின்­றனர். மேலும், குரு வழி­பாடு மூலம் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பலன் பெறு­கி­றது.

குரு பலம் இருந்தால்... சகல யோகமும் பெறலாம் என்­பார்கள். பிர­கஸ்­பதி என்று குரு­கி­ர­கத்தை அழைப்­பார்கள். இதன் பொருள் ஞானத்­த­லைவன் என்­ப­தாகும். விவே­கத்­தையும், அந்­தஸ்­தையும், ஆற்­ற­லையும், புத்­திர பாக்­கி­யத்­தையும் வாரி வழங்­குவார். பஞ்ச பூதங்­களில் ஆகாயம் குரு­ப­கவான்.

குரு­ப­கவான் ஜாத­கங்­களில் சிறப்­பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன், மனைவி, செல்­வ­செ­ழிப்பு அனைத்தும் ஏற்­படும். அதிர்ஷ்ட வாய்ப்­பு­களை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்­குவார். திரு­மணம் ஒரு­வ­ருக்கு செய்ய குரு பலம், குரு பார்வை அவ­சியம். அறிவுடைய குழந்­தை­களை பெறு­வதும் குரு­ப­கவான் அருள்தான்.

நவ­க்கி­ரகங்­களில் முழு சுபர் என்று அழைக்­கப்­ப­டு­பவர் குரு­ப­கவான் தான். இவர் ஒருவர் நல்ல நிலை­மையில் இருந்­தாலே போதும் எவ்­வ­ளவு பிரச்­சி­னை­க­ளையும் எதிர்­கொள்ளும் நிலை கிடைக்கும். இவர் காரகம் வகிக்கும் செயல் குழந்தை பாக்­கியம், திரு­மணம், நல்ல முறையில் பண­வ­ர­வுகள் ஆகி­யவை ஆகும். இவரின் கருணை இருந்தால் தான் வீட்டில் மங்­கல நிகழ்ச்சி நடை­பெறும்.

ஒரு­வ­ருக்கு திரு­மணம் நடை­பெ­று­வ­தற்கு காரகம் வகிப்­பவர் குரு பகவான். ஒழுங்­கான திரு­மணம் நடை­பெற வேண்டும் என்றால் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் தான் நடை­பெறும். கன்னி லக்­ன­மாக அமைந்து, குரு 3இல் அமர்ந்து பாவ­கி­ர­கங்கள் பார்த்­தாலோ, சேர்ந்­தாலோ இரண்டு மனை­விகள் அமையும்.

ஜல ராசி­களில் குரு முக்­கிய பங்கு வகிக்­கிறார். காரணம், கடகம் என்ற ஜல ராசியில் குரு உச்சம் பெறு­கிறார். மீனம் என்ற ஜல ராசியில் குரு ஆட்சி பெறு­கிறார். மகரம் என்ற ஜல ராசியில் குரு நீச்சம் பெறு­கிறார். ஒருவர் கடல் கடந்து அயல்­நா­டு­க­ளுக்கு சர்வ சாதா­ர­ண­மாக சென்­று­வர குருவின் அருள் தேவை. வெளி­நாடு சம்­பந்­த­மான தொடர்பு, ஏற்­று­மதி, இறக்­கு­மதி, வெளி­நாட்டு தூதுவர், நிரந்­த­ர­மாக வெளி­நாட்டில் தங்கும் அமைப்பு, கப்பல் வணிகம் ஆகி­யவை சிறக்க குருவின் கருணை வேண்டும்.

குரு எந்த வீட்டில் அமர்ந்தால் எத்­த­கைய நன்மை கிடைக்கும் என்­பதை பார்க்­கலாம்.

குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயு­ளுடன் இருப்­பார்கள். சிறந்த மனைவி அமையும். இவ­ருடன் தொடர்பு வைத்­தி­ருப்­ப­வர்கள் நல்ல ஆன்­மி­க­வா­தி­க­ளாக இருப்­பார்கள். குழந்தை பாக்­கியம் கிடைக்கும். பூர்வ புண்­ணிய பாக்­கியம் கிடைக்கும். இவர்­களின் குழந்­தைகள் சிறந்து விளங்­கு­வார்கள். வாழ்க்­கையில் இவர் நல்ல முன்­னேற்றம் காண்­பார். தந்தை இவ­ருக்கு உதவி புரிவார்.

குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்­சா­ளர்­க­ளாக இருப்­பார்கள். இவர்­களின் வாக்­குக்கு சமு­தா­யத்தில் மதிப்பு இருக்கும். கல்­வியில் சிறந்து விளங்­கு­வார்கள். குடும்­பத்தில் நிம்­மதி இருக்கும். குழந்தை பாக்­கியம் கிடைக்கும். கையி­ருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியா­பா­ரத்தில் சிறந்து விளங்­கு­வார்கள். இவ­ருடன் சேரும் வியா­பார நண்­பர்­களும் நல்ல முறையில் இருப்­பார்கள்.

குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்­தியில் ஈடு­பாடு இருக்கும் இளைய சகோ­தரருக்­கு நல்ல முன்­னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவ­ருக்கு நன்மை கிடைக்கும். எதிர்­பா­லி­ன­ரிடம் மோகம் இருக்கும். அள­வோ­டுதான் மகிழ்ச்சி இருக்கும்.

குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்­துடன் இருப்பார். குழந்தை பாக்­கியம் தாம­த­மாக இருக்கும். குழந்­தைகள் மூலம் நல்ல விஷ­யங்கள் நடக்­காது. பகை­வர்களை உண்­டா­கு­வார்கள். விவ­சாய சம்­பந்­த­பட்ட குடும்­ப­மாக இருந்தால் விவ­சாயம் மூலம் நல்ல வரு­மானம் இருக்கும்.

குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்­தி­ர­பாக்­கியம் கிடைக்கும். புத்­தி­ரர்­களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்­ணிய அறிவு இருக்கும். குல­தெய்­வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பண­வ­ர­வுகள் இருக்கும்.

குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகை­வரை வெற்றி கொள்­ளலாம். சமு­தா­யத்தில் மதிப்பு இருக்­காது. குழந்தை பாக்­கியத்தில் தடையை ஏற்­ப­டுத்­துவார். மங்­க­ள­க­ர­மான நிகழ்ச்­சிகள் நடை­பெற தாமதமாகும். உடம்பு பலம் இழந்து காணப்­படும்.

குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்­கி­னத்தை பார்ப்­பதால் உடல் நிலை நன்­றாக இருக்கும். சமு­தா­யத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனை­வி­யாக வரு­பவர் ஆன்­மிக சம்­பந்­தப்­பட்ட குடும்­ப­மாக இருக்கும். மனை­வியும் ஆன்­மிக விஷ­யங்­களில் நாட்டம் உள்­ள­வ­ராக இருப்பார். இவர்­க­ளிடம் தொடர்பு வைத்தி­ருப்­ப­வர்கள் நல்ல மத­கு­ரு­மார்­க­ளாக இருக்க வாய்ப்பு உண்டு.

குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமை­வது கஷ்­ட­மாக இருக்கும். திரு­மணம் முடிந்தால் மனை­வியின் உடல்­நிலை பாதிக்­கப்­படும். செல்வ நிலை இருக்கும். சோதி­டத்­து­றையில் நல்ல அறிவு ஏற்­படும். மரண வீட்டை குறிப்­பதால் உயிர் வதை இல்­லாமல் உடனே போகும்.

குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்­கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பத­வியில் இருப்பார். ஆன்­மி­கத்தில் சிறந்து விளங்­குவார். மிகப்­பெ­ரிய மடா­தி­ப­தி­களின் தொடர்பு ஏற்­படும். மிக உயர்ந்த படிப்­புகள் எல்லாம் படிப்­பார்கள். வெளி­நா­டுகள் செல்ல வைப்பார். வெளி­நாட்டு தொடர்பு மூலம் பண­வ­ர­வுகள் இருக்கும். குல­தெய்வ அருள் இருக்கும். மந்­திர வித்தை நன்­றாக இருக்கும்.

குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அர­சாங்­கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்­றிய வட்­டா­ரங்­களில் மதிப்பு இருக்கும். வரு­மா­னத்தை பெருக்­குவார். கோவில் சம்­பந்­தப்­பட்ட இடங்­களில் வேலைக்கு அமர்த்­துவார்.

குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வரு­மானம் இருக்கும். மூத்த சகோ­தர சகோ­த­ரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்­பர்கள் அமை­வார்கள். வாகன வச­திகள் ஏற்­படும். எந்த வேலையை எடுத்­தாலும் வரு­மா­னத்­திற்கு குறைவு இருக்­காது. குழந்தை பாக்­கியம் இருக்கும்.

குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுக்­கத்தை கடை­பி­டிக்க மாட்டார். புண்­ணிய இடங்­க­ளுக்கு அடிக்­கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்­கி­யத்தில் குறை இருக்கும். சில பேர் பக்­தி­மான்கள் போல் நடிப்­பார்கள். கோவில் கட்­டுதல், ஆறு குளம் வெட்­டுதல் போன்­ற­வற்றில் ஈடு­பட வைப்பார். பண­ வி­ரையம் ஏற்­படும்.

குரு பக­வானால் ஞாப­க­ம­றதி, காது­களில் பாதிப்பு, குடல் புண், பூச்­சி­களால் பாதிப்பு, பிரா­ம­ணர்கள் மற்றும் பெரி­யோர்­களின் சாபத்தால் உடல் பாதிப்பு, கோவில் விவ­கா­ரங்­களில் ஈடு­ப­டு­வதால் உடல்­நிலை பாதிப்பு, வறு­மையால் உடல்­நிலை பாதிப்பு போன்­றவை உண்­டாகும்.

ஒருவர் நல்­ல­வரா ? கெட்­ட­வரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும். ஒரு­வ­ருக்கு எந்த அளவு அதிர்ஷ்­டத்தை வழங்­கலாம் என்று நிர்­ண­யிப்­பவர். வியா­ழக்­கி­ழமை விரதம் கடை­பி­டித்தால், குரு பக­வானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம்.

குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் கடைபிடிக்க வேண்டும். வெண் முல்லை மலர் சாற்றி குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.-