கொள்கை அடிப்படையில் மேம்பட வேண்டிய தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை

Published By: J.G.Stephan

08 Feb, 2021 | 11:41 AM
image

சஹாப்தீன் - 


வடக்கு, கிழக்கு தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டால்தான் தங்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று அடிக்கடி தமிழ், முஸ்லிம் தரப்புக்களிலிருந்து பலர் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டாலும், இவ்விரு தரப்பினரிடையும் காணப்படும் அரசியல் ரீதியான சந்தேகங்களும், கடந்த கால கசப்புணர்வுகளும் அத்தகையதொரு ஒற்றுமைக்கு தடையாகவே இருந்து வருகின்றன. 

இலங்கையின் ஆட்சியில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கும் பேரினவாதிகளின் பிரித்தாளும் தந்திரமும், 1990ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தமிழ், முஸ்லிம் இனமோதல்களும் பல கசப்புணர்வுகளை நீடிக்கச் செய்துள்ளன. இதனால், தமிழர்களும், முஸ்லிம்களும் ஒரு போதும் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்பட மாட்டார்கள் என்பதாகவே கருதப்பட்டன. ஆனால், உலகில் சாத்தியமாகாது எதுவுமில்லை. விடாமுயற்சி பலனைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்து வைத்து சதிகளை பின்னிக்கொண்டிருந்த ஆட்சியாளர்களுக்கு பெரும்பான்மை இனத்தவரின் அதிகூடிய ஆதரவு கிடைத்தமையால் ஏற்பட்ட அதிகார அகங்காரமும், சிறுபான்மையினரின் ஆதரவு அவசியமில்லை என்றதொரு நிலைப்பாட்டிற்கு வரச் செய்தது. 

ஆட்சியாளர்களின் இந்த நிலைப்பாட்டினால் தமிழர்களும், முஸ்லிம்களும் அதிக பாதிப்புக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிறுபான்மையினரின் வாழ்விடங்கள் பறிக்கப்படுவதோடு, வாழ்வியல் பாதுகாப்புக்கும் நிச்சயமற்ற தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கள இனவாத சிந்தனையும், பௌத்த மேலாதிக்கப் போக்கும்தான் ஆட்சியாளர்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. இதனால், சிறுபான்மையினரின் கலாசாரமும், மதவிழும்மியங்களும் பௌத்த இனவாதத்தின் கூரிய அடக்குமுறைகளினால் கேள்விக்குட்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இதேவேளை, எப்போதும் ஆட்சியாளர்களுடன் இணக்க நிலைப்பாட்டுடன் அமைச்சர் பதவிகளைப் பெற்று குறைமதி சிந்தனையுடன் செயற்படும்  முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள். இவர்கள் தங்களுடைய பிரதிநிதிகளாக இருந்தால் என்ன? இல்லாது போனால் என்ன என்றதொரு வெறுப்பு நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகியுள்ளார்கள். 

பேசாத பிரதிநிதிகள்
பௌத்த இனவாதமும், மேலாதிக்க போக்கும் ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் முஸ்லிம்களை தாக்கிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் எனப் பலதும் தாக்கி அழிக்கப்பட்ட பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டாய எரிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக பேசுவதற்கும், அரசாங்கத்துடன் கோபித்துக் கொள்வதற்கும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துணிச்சல் கிடையாது. 

முஸ்லிம்களின் உடனடித் தேவையாகவுள்ள கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும், இனரீதியாக அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதென்றும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசிய போதிலும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களைத் தவிர ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்திறக்கவில்லை.

பட்டும்படாமலும் ஒரு சில கருத்துக்களை முன் வைத்திருந்தார்கள். இதனால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முஸ்லிம்களிடையே நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகையதொரு பின்னணியில் தான் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகள், பௌத்த மயமாக்கல், பாராம்பரிய நிலஅபகரிப்பு, கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எனும் தலைப்பில் தமிழ், முஸ்லிம்களின் ஆதரவுடன் பேரணி நடைபெற்றுள்ளது.

மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற இப்பேரணியில் முஸ்லிம் அரசியல்வாதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டு அமோக ஆதரவை வழங்கியமை ஆட்சியாளர்களையும், பௌத்த கடும்போக்கு இனவாதிகளையும் சிந்திக்கச் செய்துள்ளது. 

தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படுவதற்குரிய முன்மாதிரியாக இதனைக் கருத வேண்டும். இரு இனங்களும் ஒற்றுமைப்பட்டால் மாத்திரமே உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று உணரச் செய்துள்ளது. இந்தப் போராட்டத்தின் பின்னர் தமிழ், முஸ்லிம்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. 

தமிழ், முஸ்லிம் ஒற்றுமை
காலத்திற்கு காலம் ஆட்சியாளர்கள் தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்துக் கையாண்டு கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களும், முஸ்லிம்களும் அரசியல் ரீதியாக பிரிந்து நிற்கும் வரைதான் பேரினவாதிகளினால் தமது இன ஒடுக்கல் நிகழ்ச்சிநிரலை இலகுவாக நடைமுறைப்படுத்த முடியும். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படும் போதுதான் பேரினவாதிகளினதும், ஆட்சியாளர்களினதும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைளை கட்டுப்படுத்த முடியும். 

தமிழர்களும், முஸ்லிம்களும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எனும் பேரணியில் கலந்து கொண்டமையால் ஒற்றுமைப்பட்டுவிட்டார்கள் என்று நம்பிக்கை கொள்ள முடியாது. தமிழ், முஸ்லிம்களிடையே கசப்புக்களும், சந்தேகங்களும், பிரச்சினைகளும் உள்ளன. இவற்றை இல்லாமல் செய்யாது தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே அரசியல் ஒற்றுமை ஏற்படாது என்பதனை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களும் புரிந்துகொள்ள வேண்டும். 

தமிழர்களின் பிரச்சினைகளை முஸ்லிம்களும், முஸ்லிம்களின் பிரச்சினைகளை தமிழர்களும் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். பரஸ்பரமாக இருதரப்பும் தத்தமது பிரச்சினைகளை அங்கிகரிக்காத வரை ஒற்றுமை ஏற்படாது. ஓவ்வொரு தரப்பினரும் தங்களின் பிரச்சினைகளுக்கு இவ்வாறுதான் தீர்வு அமைய வேண்டுமென்று பிடித்துக் கொண்டிருக்க முடியாது. விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். அப்போதுதான் சிங்கள, பௌத்த பேரினவாதிகளின் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை முறியடிக்கலாம். வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம்களிடையே உள்ள சிறு பிரச்சினைகளைக் கூட தீர்க்க முடியாதுள்ளமை துரதிஸ்டமாகும்.

இதேவேளை, தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு விடக் கூடாதென்பதில் பேரினவாதிகள் அதிக கவனம் கொண்டுள்ளார்கள் என்பதனை புரிந்து கொள்ளல் அவசியம். ஆதலால், தமிழர் மற்றும் முஸ்லிம் தரப்பினர்கள் இரு இனங்களுக்கும் எதிரான இனவாதக் கருத்துக்களை தவிர்க்க வேண்டும். இனவாத சிந்தனை ஒரு போதும் ஆக்கத்தை தராது. அழிவையே ஏற்படுத்தும். 

ஆதலால், வடக்கு, கிழக்கு தமிழர் தரப்பினரும், முஸ்லிம் தரப்பினரும் தங்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை முதலில் காண வேண்டும். இதனைச் செய்யாது சிங்கள, பௌத்த இனவாதிகளினதும், பேரினவாத அரசியல்வாதிகளினதும் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்திட்டத்தை தோற்கடிக்க முடியாது. 

வடக்கு, கிழக்கு இணைப்பு
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது கட்டாயமாகும். அரசியல் தீர்வின் போது வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமென்பது தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையாகும். முஸ்லிம்களை பொறுத்தவரை வடக்கும், கிழக்கும் பிரிந்திருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள். வடக்குடன் கிழக்கு இணைக்கப்படும் போது முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்தில் பாரிய பின்னடைவு ஏற்படும். 


வடக்கும், கிழக்கும் இணையும் போது முஸ்லிம்களுக்கு எத்தகைய அதிகாரம் கிடைக்குமென்பதில் தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. கிழக்கு மாகாணம் தனியாக இருக்கும் போது முஸ்லிம்களுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், வடக்கும், கிழக்கும் இணையும் போது முஸ்லிம்களுக்கு அதிகாரங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. ஆதலால், வடக்கும், கிழக்கும் இணைவதாக இருந்தால் முஸ்லிம்களுக்கும் அதிகாரம் இருப்பது அவசியமாகும். புதிய அரசியல் யாப்பும், அரசியல் தீர்வும் வரும் போது எந்தவொரு இனமும் பாதிக்கக் கூடாது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் அரசியல் அலகும், அதிகாரமும் இருக்கின்ற போது முஸ்லிம்களுக்கும் அத்தகைய நிலை இருக்க வேண்டும். ஒரு இனத்தை புறக்கணித்து எடுக்கப்படும் தீர்வுகள் நாட்டிற்கு தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டுவரும், பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதுதான் இலங்கையின் அனுபவமாகும்.

இதேவேளை, எந்தவொரு அரசியல் தீர்வாக இருந்தாலும் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கு பௌத்த உயர்பீடங்களும், ஆட்சியாளர்களும் ஒரு போதும் இணங்கமாட்டார்கள். வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது ஒரு சிக்கலான காரியமாகவே அமையும். 

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள போதிலும், மாவட்டச் செயலாளராக சிங்கள அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றார்கள். இங்குள்ள அரச காணிகள் பெரும்பாலும் சிங்களவர்களுக்கே வழங்கப்படுகின்றன. அம்பாறை மாவட்டம் அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களினால் சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்டதாக மாற்றப்பட்டுவிடும். இதனால்தான் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளையும் இணைத்து கரையோர மாவட்டத்தை உருவாக்க வேண்டுமென்று முஸ்லிம்கள் காலத்திற்கு காலம் ஆட்சி செய்த அரசாங்கங்களைக் கேட்டுக் கொண்ட போதிலும் அரசாங்கம் அதனை நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. இதேவேளை, இக்கரையோர மாவட்டக் கோரிக்கைக்கு தமிழர்கள் எதிர்ப்புக் காட்டுகின்றார்கள்.

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள கரையோர மாவட்டத்தில் தமிழர்களை முஸ்லிம்கள் புறக்கணிப்பார்கள் என்று எதிர்ப்புக் காட்டியமையை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள கரையோர மாவட்டத்தில் தமிழர்கள் புறக்கணிப்படுவர்கள் என்றால் இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிகள் சிறுபான்மையினராக இருப்பார்கள். அதனால் தமிழர்களினால் முஸ்லிம்கள் புறக்கணிப்படுவார்கள் என்ற அச்சம் முஸ்லிம்களுக்கு ஏற்படுவதனை தவறு என்று கருத முடியாது. ஆதலால், இதற்கு தீர்வு காண வேண்டும்.

கல்முனையில் (தமிழ்) உபபிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்று தமிழர்கள் கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துதற்குரிய எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.  இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் உள்ளன. இது போன்ற பிரச்சினைகளுக்கு விட்டுக் கொடுப்பு செய்வதற்கு இரு இனங்களும் முன்வராத வரை தமிழ், முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டுவிடும் என்று சொல்ல முடியாது.


வரலாற்று நிகழ்வு
மேற்படி பிரச்சினைகளுக்கு தமிழர்களும், முஸ்லிம்களும் தீர்வுகளைக் காணாத நிலையில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அமைதிப் போராட்டத்தை தமிழ் சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தாலும் அதில் முஸ்லிம்களும் பங்கு கொண்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம்களிடையே பல பிரச்சினைகள் உள்ள போதிலும் இந்தப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு கொண்டமை முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருப்பதுடன், கொரோனாவினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யாது அடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதிருப்பதும், தகனம் செய்வதே தீர்வாகும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடும் மட்டுமன்றி முஸ்லிம்களின் இந்த பிரச்சினைக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தமையும், அப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியமையும் தமிழர் தரப்பினர் என்தனாலுமே முஸ்லிம்கள் பேரணியில் கலந்து கொண்டு பெருஆதரவு வழங்கினார்கள்.

இந்த வரலாற்று நிகழ்வினை ஆரம்பப் புள்ளியாக வைத்துக் கொண்டு தமிழர்களும், முஸ்லிம்களும் விட்டுக் கொடுப்பு செய்து தீர்வுகளை அடைந்து கொள்ளும் போது தமிழ், முஸ்லிம்களின் உறவும், அரசியலும் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக மாறும். இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் முஸ்லிம்களும் கலந்து கொண்டமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இப்பேரணிக்கு முஸ்லிம்களிடையே பலத்த ஆதரவு கிடைக்கப் பெற்ற போதிலும், தற்போதைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், தவிசாளர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் தான் கலந்து கொண்டார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன் இப்பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு பகிரங்க அழைப்பு விடுத்த போதிலும், அக்கட்சியின் கிழக்கைச் சேர்ந்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரான முஷரப் கலந்து கொள்ளவில்லை.

முரண்பாடான கொள்கையாளர்கள்
வடக்கு, கிழக்கு தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட வேண்டுமென்பது தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. 

தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள அரசியல் கட்சிகளை எடுத்துக் கொண்டால் இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள். வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமென்பதே தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடாகும். ஆனால், முஸ்லிம்கள் கிழக்கு தனியாக பிரிந்திருக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்டுள்ளார்கள். கிழக்கு தனியாக இருப்பதே கிழக்கு முஸ்லிம்களுக்கு நல்லதென்று நினைக்கின்றார்கள்.

மேலும், முஸ்லிம் கட்சிகள் பெரும்பாலும் ஆட்சியாளர்களுடன் இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றவர்கள். அமைச்சர் பதவிகளில் நாட்டங் கொண்டவர்கள். ஆட்சியாளர்களை பகைத்துக் கொள்வதற்கு பெரும்பாலும் விரும்பாதவர்கள். அதே வேளை, தமிழர்களின் தரப்பிலுள்ள் அதிகமான கட்சிகள் எதிர்க்கட்சி அரசியலை மேற்கொள்கின்றன.

இவ்வாறு கொள்கை ரீதியாக பல விடயங்களில் முரண்பட்டுள்ள இரண்டு தரப்பினரும் ஒற்றுமையுடன் செயற்படுவது என்பது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். இரு தரப்பினரும் ஒரு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முதலில் கொள்கை ரீதியாக ஒரு பொது உடன்பாட்டிற்கு வருதல் அவசியமாகும். இதற்கு தமிழர்களும், முஸ்லிம்களும் சிலவற்றில் விட்டுக் கொடுப்புக்களை செய்வதற்கு முன் வருதல் வேண்டும். 

இதற்கு தயாராகாமல் இன்றைய அரசியல் சூழலை மாத்திரம் கவனத்திற் கொண்டு ஒற்றுமையுடன் செயற்பட்டாலும், அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது. ஆகவே பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஒற்றுமைப்படுவதே காலத்தின் தேவையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54