உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்கள்: ஆணைக்குழு அறிக்கை இன்று அமைச்சரவைக்கு

Published By: Digital Desk 3

08 Feb, 2021 | 10:34 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை இன்று (08.02.2021) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது, விஷேட காரணியாக இந்த  ஆணைக் குழு அறிக்கை அமைச்சரவையில் ஆராயப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்ச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் நடவடிக்கைகள் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி மாலை 06.15 மணிக்கு நிறைவு பெற்றன. இந் நிலையில் கடந்த முதலாம் திகதி முற்பகல் 11.00 மணியளவில் ஆணைக் குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.  

குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பரிந்துறைகள் என்ன என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அந்த பரிந்துறைகளில் தனிபர்களின் பெயர் குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக  தனிப்பட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க எந்த பரிந்துரைகளும்  இல்லை என ஆணைக் குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை  இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவொன்று  முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டது. 

1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி இவ்வாணைக் குழு நியமிக்கப்பட்டது.  அது முதல் கடந்த மார்ச் 20, செப்டம்பர் 20, டிசம்பர் 20 ஆம் திகதிகளில் அவ்வாணைக் குழுவின் பதவிக் காலம் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால்  3 சந்தர்ப்பங்களில் முறையே 6 மாதங்கள், 3 மாதங்கள், ஒரு மாதம் என நீடிக்கப்பட்டது.

ஆணைக் குழுவின் தலைவராக   உயர் நீதிமன்ற நீதியரசராக செயற்படும்   ஜனக் டி சில்வவா கடமையாற்றியிருந்தார். மேன் முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் ஆணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

அதன்படி ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் கடந்த 2019 ஒக்டோபர் 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

 சாட்சி விசாரணைகளை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சிலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி அய்ஷா ஜினசேன தலைமையில், சிரேஷ்ட அரச சட்டவாதிகளான சஞ்ஜீவ திஸாநாயக்க, சுகர்ஷி ஹேரத், அரச சட்டவாதிகளான நிமேஷா டி அல்விஸ், சந்துரங்க பண்டார, திவங்க கலுதுவர, ஹரீந்ர ஜயசிங்க ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர் நெறிப்படுத்தியிருந்தனர். இதனைவிட ஆணைக் குழுவின் ஆரம்பம் முதல் இறுதி வரை, கத்தோலிக்க திருச்சபையின்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.

 இதனைவிட,  ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவானது ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் வெலிகன்னவின் கீழ் செயற்பட்டதுடன் அதில் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த லியனகே கடமையாற்றியதுடன் மொத்தமாக 41 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

 இந்நிலையில் கடந்த 2019 ஆகஸ்ட் 31 ஆம் திகதி சாட்சி விசாரணைகளை ஆரம்பித்த ஆணைக் குழு, அன்று முதல்  சம்பிரதாய இறுதி அமர்வு வரையில் 214 நாட்கள்  கூடியது. அதன்படி 640 சந்தர்ப்பங்களில் 457 சாட்சியாளர்கள் சாட்சி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 இதனைவிட,  சாட்சி விசாரணைகளை நெறிப்படுத்திய சட்ட மா அதிபர் தரப்பினரால்,  'எக்ஸ்' என அடையாளப்படுத்தி 680 ஆவணங்களும், 'சி' என அடையாளப்படுத்தி 1556 ஆவணங்க்ளுமாக மொத்தமாக 2236 ஆவணங்கள் உதவி சாட்சியங்களாக ஆணைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைவிட சாட்சியம் வழங்கிய பல சாட்சியாளர்களும், அவர்களின் பெயரின் முதல் ஆங்கில எழுத்தை அடையளமாக கொண்டு தங்கள் சார்பிலான ஆவண சாட்சியங்களை முன்வைத்திருந்தமையும்  விஷேட அம்சமாகும்.

ஆணைக் குழுவின் இறுதி அமர்வின் போது   (சம்பிரதாயபூர்வமானது ) அரசின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி அய்ஷா ஜினசேன,

தாக்குதலுடன் நேரடியாக, மறைமுகமாக தொடர்புபட்டவர்கள், அவற்றுக்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை ஆணைக் குழு வெளிப்படுத்துவதுடன், குறிப்பாக உடனடி, குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் ஆணைக் குழுவின் பரிந்துரைகள் இருக்கும் என நம்புவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலானது தீர்மானம் எடுக்கும் தரப்பின் தோல்வியா?, அவர்களுக்கு  தகவல் முன் கூட்டியே கிடைத்ததா? அவ்வாறெனில் குறித்த தாக்குதல் தொடர்பிலான அவர்களது வகிபாகம் என்ன?, முழு கட்டமைப்பிலும் குறைப்படுகள் உள்ளனவா போன்ற விடயங்கள் அலசப்படும் என நம்புவதாக ஜனாதிபதி சட்டத்தரணி அய்ஷா ஜினசேன அதன்போது  குறிப்பிட்டார்.

அத்துடன் விஷேடமாக, கடந்த காலங்களில் மதங்களுக்கு இடையிலான, இனங்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் முரண்பாடுகள் இத்தகைய பயங்கரவாத, அடிப்படைவாத தாக்குதலொன்றினை  ஊக்குவித்ததா, எதிர் காலத்தில் இவ்வாறான முரண்பாடுகள் , மோதல்கள், அடிப்படைவாத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆரயப்படல் வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

  நாட்டில் ' நாடு கடத்தல்' சட்டம் ஒன்று அமுலில் உள்ள போதும், மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட பின்னர் வழக்கு தொடர்பிலேயே வெளிநாட்டில் உள்ள ஒருவரை இவ்வாரு இலங்கைக்கு அழைத்து வர அச்சட்டம் ஊடாக இயலுமை உள்ளதாகவும்,  விசாரணைக்காக ஒருவரை அவ்வாறு அழைத்துவர முடியாமல் உள்ளமை  விசாரணைகளுக்கு பாரிய தடங்கலாக அமைந்துள்ளதாகவும் அதனையும் ஆணைக் குழு ஆராயும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

 அத்துடன் உயிர்த்த ஞாயிரறு தாக்குதல் குறித்து அமரிக்கா சில இலங்கை பிரஜைகளுக்கு எதிராக அந் நாட்டு நீதிமன்றில் குற்றப் பத்திரிகை சமர்ப்பித்துள்ள நிலையில், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு நிலையில் அவ்வாறானதொரு நடவடிக்கையை எம்மால் எடுக்க போதுமான சட்ட பாதுகாப்பு உள்ளதா என்பதும் கேள்விக் குறியே என சுட்டிக்காட்டி அவ்வாறான சட்ட ஏற்பாடுகளின் அவசியத்தை ஆணைக் குழு வலியுறுத்தும் என நம்புவதாக குறிப்பிட்டார்.

 இந்நிலையில், இந்த விடயங்கள் பலவும் இறுதி ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு அறிக்கையில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக  அறிய முடிகின்ரது.

 புனர்வாழ்வளிப்பு:

அடிப்படைவாத விடயங்களால் உள்ளீர்க்கப்பட்டுள்ள  இளைஞர் யுவதிகளை அதிலிருந்து மீட்கும் படியாக முன்னெடுக்கப்பட வேண்டிய புனர்வாழ்வளிப்பு கட்டமைப்பு தொடர்பில் ஆணைக் குழு அறிக்கை விஷேடமாக  தமது பரிந்துரைகளில் விடயங்களை கூறியிருப்பதாக நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.

சட்ட திருத்தங்கள்:

இதனைவிட, குறிப்பாக நாட்டின் தேசிய பாதுகாப்பு, உளவுத் தகவல்களை பரிமாற்றல் நடவடிக்கை,  சந்தேக நபர்கள் தொடர்பில் செயற்பட முடியுமான விவகாரங்கள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி பல்வேறு சட்ட திருத்தங்களுக்கு இவ்வாணைக் குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

 குறிப்பாக  தற்போது நடை முறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் விதமாக நாட்டுக்கு புதிய பயங்கரவாத தடை சட்டமொன்றினை அறிமுகம் செய்வது தொடர்பிலான பரிந்துரைகள் அதில் விஷேடமாக உள்ளதாக நம்பப்படுகின்றது.

 இதற்கான பரிந்துரைகளை  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பயங்கரவாத விடயங்கள் குறித்து ஆராயும் நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன உள்ளிட்ட தரப்பினரின் சாட்சியங்களின் போது ஆணைக் குழு பதிவு செய்திருந்த நிலையில், அந்த விடயங்கள் மீதும் அவதானம் செலுத்தி  புதிய பயங்கரவாத தடை சட்டம் ஒன்றின் அவசியம் குறித்த பரிந்துரைகள் உள்ளீர்க்கப்பட்டிருப்பதாக  தகவல்கள்  ஊடாக அறிய முடிகின்றது.

உளவுத் தகவல்களை பரிமாற்றுவதில் இருந்த தவறுகள்:

 குறிப்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகளுக்கு அமைய, 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு முன்னர் வெளிநாட்டு உளவுச் சேவை ஒன்றிடம் இருந்து, அரச உளவுச் சேவையின்  அப்போதைய பணிப்பாளரும் தற்போதைய  மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவுக்கு கிடைக்கப் பெற்ற  உளவுத் தகவல் மிகப் பெரிய பேசு பொருளாக இருந்தது.

 இது தொடர்பில் அப்போதைய தேசிய உளவுச் சேவை பிரதானி சிசிர மெண்டிஸ், பாதுகாப்பு செயலர் ஹேமசிறி,  முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித், நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பல உயர் பொலிஸ் அதிகாரிகளிடமும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, முன்னாள் பிரதமர் ரணில், முப்படைகளின் அப்போதைய உளவுத் துறைகளின் பிரதானிகள், உள்ளிட்ட பல சாட்சியாளர்களிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

 அதன்படி,   தாக்குதல் குறித்த முன் கூட்டிய உளவுத் தகவல்களை பறிமாற்றிக்கொள்வதில்   நிகழ்ந்துள்ள குறைப்பாடுகள், சாட்சி விசாரணைகளின் இடையிலேயே வெளிப்பட்டிருந்தன.

 இந்நிலையில் உளவுத் தகவல்கள் பரிமாற்றம், உளவுத் துறை தொடர்பில் தனியாக செயற்பட புதிய சட்ட உருவாக்கங்களை ஆணைக் குழு பரிந்துரைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

 நடந்த தாக்குதல்களை முன் கூட்டிய தகவல்கள் இருந்தும் தடுக்காமை தொடர்பில் தற்போதும்,  முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித், பாதுகாப்பு செயலர் ஹேமசிறி ஆகியோர் குற்ற  விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். அவ்வாறான  பின்னணியில் முன் கூட்டிய உளவுத் தகவல்களை பரிமாறிய விடயங்களை மையப்படுத்தி அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் தொடர்பாக ஆணைக் குழு அடையாளம் கண்டு அது சார்ந்த பரிந்துரைகளை தனது அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளதாக நம்பகமாக அறிய முடிகின்றது.

 அனைத்து மதங்களிலும் உள்ள அடிப்படைவாத குழுக்களுக்கு தடை:

இதேவேளை, ஏப்ரல்  21 தாக்குதல்களின் பின்னர் வட மேல் மாகாணத்தில் பதிவான முஸ்லிம்களை இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பிலும் ஆணைக் குழு விசாரணை செ நிலையில் அது சார்ந்த பரிந்துரைகளும் இறுதி அறிக்கையில் உள்ளதாக நம்பப்படுகின்றது,

 இதனைவிட,   ஏப்ரல் தாக்குதலுக்கு காரணமாக, அத்தாக்குதலில் ஈடுபட்ட  குண்டுதாரிகளில் ஒருவரான  தெஹிவளை ட்ரொபிகல் இன் ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த ஜெமீல் மொஹம்மட் எனும் பயங்கரவாதி குறித்து விசாரணை செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின்  சாட்சியத்துக்கு அமைய   சஹ்ரான் கும்பல் குண்டுத் தாக்குதல்களை இலங்கையில் நடாத்த 10 காரணிகளை கொண்டிருந்தமை வெளிப்பட்டது.

 குறிப்பாக அல்லாஹ்வை அவமரியாதை செய்யும் விதமான கருத்துக்களை பொது பல சேனாவின் செயலர் கலகொட அத்தே ஞான சார தேரர் வெளியிட்டமை,  குளியாபிட்டியவில் பன்றியின் உருவமொன்றில் அல்லாஹ் என எழுதப்பட்டிருந்தமை, முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வீடுகள் உடைக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.  இந்நிலையில் இலங்கையில் அவ்வப்போது பதிவான பல்வேறு அடிப்படைவாத சம்பவங்கள் தொடர்பிலும் ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகளில் வெளிப்பட்டது.

 அதன்படி, அவை அனைத்தும் தொடர்பில் மிக ஆழமாக ஆராய்ந்துள்ள ஆணைக் குழு,  நாட்டில் செயற்படும் அனைத்து மதங்களையும் சேர்ந்த அடிப்படைவாத குழுக்கள் அமைப்புக்களை தடை செய்வது அல்லது அது சார்ந்த பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலான பரிந்துரைகள் ஆணைக் குழு அறிக்கையில் சேர்த்திருப்பதாக  அறிய முடிகின்றது.

தேசிய பாதுகாப்புக்கு முதல் இடம்:

ஆணைக் குழுவின் அறிக்கை ஊடாக தேசிய பாதுகாப்பு விடயம் பிரதான விடயமாக பார்க்கப்படும் நிலையில் அதுசார்ந்த பல கடினமான முடிவுகள் பரிந்துரைக்கப்ப்ட்டுள்ளதாகவும் தெரிகிறது.

குறிப்பாக முஸ்லிம் பிரதி நிதிகளிடமும், ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி உள்ளிட்ட ஏனைய உலமாக்களிடமும் கூட சாட்சிப் பதிவு இடம்பெற்ற போதும், முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் சாட்சிப் பதிவுகள் இடம்பெற்ற போதும், மேலதிக கேள்வியாக  மதரசா விவகாரம், நிகாப் விடயம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நிகாப் விவகாரத்தில் தேசிய பாதுகாப்பை கருதிய தீர்மானங்களையும், மத்ரஸா விவகாரத்திலும் சில  மாற்றங்களையும் இந்த ஆணைக் குழுவின் அறிக்கை பரிந்துரைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும் 1,000 பக்கங்களைக் கொண்ட பல்வேறு பரிந்துரைகள் ஆணைக் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் கூட, சஹ்ரானுக்கு மேலால் அவரை இயக்கி செயற்பட்ட நபர் யார் என்பதற்கு ஆணைக் குழுவின் அறிக்கையில் பதில் இல்லை என கூறப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33