(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு எதிர்கொண்டுள்ள அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொ்ளள சர்வதே நாணய நிதியத்துடன் கலந்துரையாடவேண்டும். அதற்காக நாடு பாரிய பொருளாதா நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பொருளாளர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நாட்டின் அந்நிய செலாவணியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பொருளாதார ரீதியில் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணியில் முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 400 மில்லியன் ரூபாவை விரைவாக கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டதாலேயே அரசாங்கம் அதனை செலுத்தி இருக்கின்றது. ஆனால் இந்தியாவுக்கு செலுத்தவேண்டிய காலத்திலேயே இதனை செலுத்தியதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இந்தியாவிடம் பெற்றிருந்த 400 மில்லியன் ரூபா கடன் தொகையை பெப்ரவரி முதலாம் திகதியே செலுத்தியிருக்கவேண்டும். பெப்ரவரி முதலாம் திகதியுடன் அதன் ஒப்பந்தகாலம் முடிவடைகின்றது. உரிய காலத்தில் செலுத்தாமல் இன்னும் 3, 6 மாதங்களில் செலுத்துவதாக இருந்தால், அதுதொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி செலுத்த முடியுமான வசதிகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்றே அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்திடம் முறையான கொள்கை ஒன்று இல்லாததன் காரணமாக நாட்டின் அந்நிய செலாவணி நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கின்றது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டிருந்தால், இந்தியாவுக்கு செலுத்தவேண்டி இருந்த 400 மில்லியன் ரூபாவை செலுத்துவதற்கு இன்னும் காலம் எடுத்துக்கொள்ள முடியுமாக இருந்தது.

மேலும் நாட்டின் அந்நியச் செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஆரம்பமாக நாங்கள் நாட்டில் பாரிய நிதி பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதன் பிறகு, அதனை தீர்த்துக்கொள்ள தேவையான மாற்று வேலைத்திட்டங்களை அமைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு சர்வதே நாணய நிதியத்துக்கு செல்லவேண்டி ஏற்படுகின்றது. இந்தியாவுக்கு செலுத்த இருந்த 400 மில்லியன் ரூபா சிறிய விடயம். ஏனெனில் நாங்கள் இந்த வருடத்துக்குள் 6 ஆயிரம் டொலர் மில்லியன் செலுத்த இருக்கின்றது. அதனை எப்படி செலுத்துவதென்பதுதான் பிரதான பிரச்சினை. அதற்கான மாற்று வேலைத்திட்டங்களை அமைத்துக்கொள்ளவேண்டும் என்றார்.