(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா தொற்றால் 4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 61 வயதான பெண்ணொருவரும் வக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண்ணொருவரும், வெலிமட பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண்ணொருவரும், பமுனுவ பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவரும் தும்மலசூரிய பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய 11 மாவட்டங்களில் 51 பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாம் அலையின் பின்னர் மாத்திரம் 64 000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு இவர்களில் 25 000 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 772 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 68 938 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 62 594 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 5993 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முடக்கப்பட்டுள்ள 51 பிரதேசங்கள்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு, குருணாகல், வவுனியா, கேகாலை, அம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் வீட்டுத்திட்டம் என 51 பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கொழும்பில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் வீட்டுத் திட்டமொன்றும் , கம்பஹாவில் 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , களுத்துறையில் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , கண்டியில் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , மாத்தளையில் 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , மட்டக்களப்பில் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , குருணாகலில் இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , வவுனியாவில் 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , கேகாலை , அம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் 25 000 தொற்றாளர்கள்

கொவிட் தொற்றின் இரண்டாம் அலையின் பின்னர் கொழும்பில் மாத்திரம் 25 698 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமையும் 116 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இதே போன்று கம்பஹாவில் 13 540 , களுத்துறையில் 5210, கண்டியில் 3743 , குருணாகலில் 1949 இரத்தினபுரியில் 1558, அம்பாறையில் 1139 என ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

சனியன்று பதிவான மரணங்கள்

நேற்று சனிக்கிழமை 8 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்வடைந்துள்ளது.

கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய பெண்ணொருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இரத்தம் நஞ்சானமை, கொவிட் நிமோனியா, சிறுநீரக நோய் இவரது மரணத்திற்கான காரணமாகும்.

கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர் வடகொழும்பு போதனா வைத்தியசாலையில் தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இதய நோய், கொவிட் நிமோனியா, சிறுநீரக நோய் என்பன இவரது மரணத்திற்கான காரணமாகும்.

மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது ஙெ;கு கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் புற்று நோய் மரணத்திற்கான காரணமாகும்.

களனி பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய ஆணொருவர் வெலிசறை மார்பு சிகிச்சை வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தங்கொட்டுவ மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றால் இதயம் செயழிலந்தமை, சுவாச தொகுதியில் ஏற்பட்ட தொற்று, புற்று நோய்,  ஈரல் நோய் இவரது மரணத்திற்கான காரணமாகும்.

கொழும்பு 14 ஐ சேர்ந்த 85 வயதுடைய ஆணொருவர் கடந்த 4 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் நிமோனியா நிலையால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 13 ஐ சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா , நீரிழிவு நோய் தீவிரமடைந்தமை, சிறுநீரகம் செயழிலந்தமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய பெண்னொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு கடந்த 4 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். சிக்கலடைந்த சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டமை மற்றும் கொவிட் நிமோனியா நிலை மரணத்திற்கான காரணமாகும்.

முந்தல் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆணொருவர் மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.