(நேர்காணல்:- ஆர்.ராம்)
கிழக்கு கொள்கலன் முனையத்தின் முழு உரித்தும் இலங்கையிடமே இருப்பதோடு துறைமுக அதிகார சபையின் கீழேயே அது அபிவிருத்தி செய்யப்படுமென தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ஒருபோதும் மாறாது என்று துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் (ஒய்வு) ஆர்.எம்.தயா ரத்நாயக்க வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:-கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் சம்பந்தமான இறுதி தீர்மானம் என்னவாக உள்ளது?
பதில்:- இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழாக உள்நாட்டு முதலீட்டாளர்களின் மூலம் அதனை அபிவிருத்தி செய்வதென்று அமைச்சரவையில் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.
கேள்வி:- இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள், ஆனால் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை செயற்பட வேண்டும் என்று இந்திய தரப்பு பகிரங்கமாக வலியுறுத்திக் கொண்டிருப்பதால் தற்போதைய தீர்மானம் மாற்றமடையுமா?
பதில்:- ஒருபோதும் இல்லை. கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானமே தீர்க்கமானது. அமைச்சரவை அங்கீகாரத்துடன் தான் எடுக்கப்பட்டுள்ளது.தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.
கேள்வி:- இருப்பினும், இந்தியாவிற்கு உத்தியோக பூர்வமான அறிவிப்பு இன்னமும் வழங்கப்படவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றதே?
பதில்:- அந்தச் செயற்பாட்டினை ஜனாதிபதி கோட்டாபயவும், பிரதமர் மஹிந்தவும் முன்னெடுத்து சுமூகமாக முடிவுக்கு கொண்டுவருவார்கள்.
கேள்வி:- கிழக்கு கொள்கலன் முனையம் என்பது வாணிபத்துக்கு அப்பால் இந்தியாவுடனான இராஜதந்திர விடயங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதல்லவா?
பதில்:- நிச்சயமாக, இந்தியா எமது அயல்நாடு. பிராந்தியத்தில் செல்வாக்கு மிக்க நாடு. அதன் காரணமாகவே இந்த விடயம் மேலெழுந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அது இலங்கையுடன் மிகவும் அந்நியோன்னியமாகச் செயற்படும்’ நாடாகும். அத்தோடு நீண்ட பாரம்பரிய உறவுகளைக் கொண்டதாகவும் எமக்கு உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கும் நாடாகவும் இருக்கின்றது.
ஆகவே கிழக்கு கொள்கலன் முனைய விடயத்தினை மையப்படுத்தி அத்தகைய நாட்டுடன் முரண்பட்டுக் கொள்ள வேண்டிய தேவையில்லை. உறவுகளைப் பாதிக்காதவாறு யதார்த்த பூர்வமாக நிலைமகளை ஜனாதிபதியும், பிரதமரும் இந்தியாவுக்கு விளக்குவார்கள். அத்துடன் இந்த விடயத்தினை இராஜதந்திர ரீதியில் அவர்கள் சுமூகமாக நிறைவுக்கு கொண்டு வருவார்கள்.
கேள்வி:- இலங்கைத் துறைமுக அதிகாரசபையிடத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தினை பூரணமாக அபிவிருத்தி செய்வதற்கான ‘இயலுமை’ காணப்படுகின்றதா?
பதில்:- 2013, 2014ஆம் ஆண்டுகளில் இந்தக் கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திப் பணிகளை இலங்கை துறைமுக அதிகாரசபையே முன்னெடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் முறையாக திட்டமிடப்பட்டு செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்தன. அதனடிப்படையில் மொத்த அபிவிருத்திச் செயற்பாட்டில் நூற்றுக்கு முப்பது சதவீதமான பணிகள் நிறைவு பெற்ற தருணத்திலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கம் இந்த முனையத்தின் அபிவிருத்திப் பணிகளை திட்டமிட்டவாறு முன்னெடுக்காது இந்தியா மற்றும் ஜப்பானுடன் கூட்டிணைந்து அபிவிருத்தி செய்வதென முத்தரப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது.
அதனாலேயே இவ்வளவு பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கின்றன. தற்போது அவை தீர்க்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டடிருக்கும் திட்டத்தினை ஒருதடவை மீளாய்வு செய்து அதனை நடைமுறைப்படுத்தலாம்.
கேள்வி:- இறுதி செய்யப்பட்டிருக்கும் திட்டத்தின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் வருமானம் உள்ளிட்ட இதர இலக்குகள் என்ன?
பதில்:- கிழக்கு கொள்கலன் முனையமானது, கொழும்புத்துறைமுகத்தினதும், தெற்காசியப் பிராந்தியத்தினதும் மூலோபாயப் பெறுதிமதி மிக்கதாகும். கிழக்கு கொள்கலன் முனையம் அபிவிருத்தி செய்யப்படும் அதேநேரம் இன்னமும் ஒன்பது வருடங்களில் இந்த முனையத்தின் மறுபக்கத்தில் இருக்கின்ற தெற்காசிய நுழைவாயில் முனையத்தின் (எஸ்.ஏ.ஜி.ரி) முழு உரிமையும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு கிடைக்கவுள்ளது. அவ்வாறான நிலையில் இரண்டு பக்கமும் கொள்கலன் முனையத்தினைக் கொண்டதொரு பகுதியாக கிழக்கு முனையம் மாறவுள்ளது. இவ்வாறான கட்டமைப்பைக் கொண்ட கொள்கலன் முனையங்கள் உலகிலேயே மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன.
இதனால் கிழக்கு முனையத்தின் பெறுமதி மேலும் அதிகரிக்கவுள்ளதோடு அதன் ஊடாகப் பெறப்படும் வருமானமும் கணிசமாக அதிகரிக்கவுள்ளது. தற்போதைய நிலையில் கிழக்கு கொள்கலன் முனையத்தினால் வருடமொன்று ஒருஇலட்சத்து எட்டாயிரம் கொள்கலன்களை கையாள முடியும். தற்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் துறைமுக அதிகாரசபையினால் இவ்வருடத்தின் நடுப்பகுதியில் கிழக்கு முனையத்தின் இரண்டாவது கட்டம் நிறைவு செய்யப்படும்போது எட்டாயிரம் வரையிலான கொள்கலன்களை மேலும் அதிகரிக்கலாம்.
2025ஆம் ஆண்டுக்குள் இந்த முனையத்தின் அபிவிருத்தி பணிகளை முழுமையாக நிறைவு செய்யும் போது ஆண்டொன்றுக்கு 2.5மில்லியன் கொள்கலன்களை கையாள முடியும். இதன்மூலம் வருடமொன்றுக்கு 150முதல் 200 மில்லியன் டொர்கள் வரையிலான வருமானத்தினை ஈட்ட முடியும்.
கேள்வி:-கிழக்கு கொள்கலன் முனையத்தினை இந்தியாவுக்கு வழங்காத நிலையில் மேற்கு கொள்கலன் முனையத்தினை அந்நாட்டிற்கு நூற்றுக்கு 85சதவீதமான உரிமத்துடன் வழங்குவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதல்லவா?
பதில்:-மேற்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் அதனை பொது-தனியார் கூட்ட முயற்சியின் கீழாவே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அதனடிப்படையில் பார்க்கின்றபோது இதுபுதிய விடயமொன்று அல்ல. ஆனால் இந்தியா, ஜப்பான் ஆகியவற்றுக்கு வழங்குவதான அறிவிப்பு மட்டுமே புதியதாக உள்ளது.
மேலும் அமைச்சரவையில் அவ்விதமான யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியா, ஜப்பான் ஆகியவற்றிடம் இதுவரை இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. ஆகவே எதிர்வரும் காலத்தில் கலந்துரையாடலின் அடிப்படையில் ‘இருதரப்பு வெற்றி’ கோட்பாட்டுக்கு அமைவாக அதனை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
கேள்வி:- அமைச்சரவைப் இணைப் பேச்சாளர் உதய கம்பன்பில மேற்கு கொள்கலன் முனையம் மூலோபாய பெறுமதி அற்றது என்று கூறுகின்றார். நீங்கள் கொழும்புத்துறைமுகமே மூலோபாயப் பெறுமதி உடையது என்கின்றீர்களே?
பதில்:- கொழும்பு துறைமுகம் முழுவதும் மூலோபாய பெறுமதி மிக்கது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தற்போதைய நிலையில் வாணிப ரீதியாக பார்க்கின்றபோது கிழக்கு கொள்கலன் முனையத்தில் இரட்டை நன்மை இருப்பதன் காரணமாக அது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
மேற்கு கொள்கலன் முனையம் எதிர்காலத்தில் தான் தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு அதனை தயார்ப்படுத்துகின்றபோது 18 முதல் 22 மீற்றர்கள் ஆழப்படுத்த முடியும். அதேநேரம் 2600 மீற்றர்கள் நீளமுடையதாகவும் அமைக்க முடியும். அவ்வாறான அளவுகளில் மேற்கு கொள்கலன் முனைய அபவிருத்தி முழுமை அடைகின்றபோது அதுவும் மூலோபாய முக்கியத்துவத்தினை அடைந்துவிடும்.
கேள்வி:- கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் அல்லது தெற்கு முனையத்தினை (சி.ஐ.சி.டி) சீனாவிற்கு வழங்கும்போது இந்த அளவிற்கு எதிர்ப்புக்கள் எழவில்லையே?
பதில்:- கொழும்புத்துறைமுகத்தின் தெற்கு மற்றும் மேற்கு கொள்கலன் முனையங்களை பொது-தனியார் கூட்டு முயற்சியின் கீழும் கிழக்கு கொள்கலன் முனையத்தினை அதிகாரசபையும் அபிவிருத்தி செய்வதென்றே தீர்மானிக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தினால் அந்த தீர்மானம் குழப்பப்பட்டமையினாலேயே தற்போதை அரசாங்கம் அதற்கான தீர்வைக் காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் இந்தியா, சீனாவிற்குள் காணப்படும் போட்டிகளுக்கு அப்பால் கொழும்பு துறைமுகத்தில் சமத்துவமாக இருதரப்புடனும் இணைந்து செயற்பட எதிர்பார்த்திருக்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM