(எம்.ஆர்.எம்.வசீம்)

அடுத்துவரும் பிரதான தேர்தல்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் இணைந்து செயற்படவேண்டும். கட்சியை பலப்படுத்துவதன் மூலம் மாத்திரமே அரசாங்கத்துகக்கு சவாலை ஏற்படுத்த முடியும் என ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

Image

கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் கொண்டு செல்லும் வேலைத்திட்டங்கள் அனைத்தும் தோல்வியிலே செல்கின்றன. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக பாரியளவில் கஷ்டப்படுகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை. அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்திருக்கின்றனர்.

அத்துடன் நாட்டின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி நாட்டுக்காக பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றன. நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நிலையில் இருந்து மீட்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் முடியும்.

அதற்காக ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும். எம்முடன் இருந்து பிரிந்து சென்றிருப்பவர்களுடன் இணைந்து செயற்படுவதாக இருந்தாலும் அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதாக இருந்தாலும் ஆரம்பாக எமது கட்சியை நாங்கள் பலப்படுத்திக்கொள்ளவேண்டும்.

மேலும் அடுத்துவரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் போது அரசாங்கத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்த எமக்கு பொதுவான அரசியல் தளம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். நாங்கள் பிரிந்து செல்வோமானால் அதன் நன்மை அரசாங்கத்துக்கே கிடைக்கின்றது. இணைந்து செயற்படுவதன் மூலமே அரசாங்கத்துக்கு சவாலை ஏற்படுத்த முடியும்.

அதனால் நாங்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியாக ஒன்றுபட்டு செயற்பட்டு எமது யானையை மீண்டும் தூக்கி நிறுத்தவேண்டும். கட்சியை பலப்படுத்துவதன் மூலமே அதற்கான சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்றார்