கைவிட்டுப்போன கிழக்கு முனையம்

Published By: Gayathri

07 Feb, 2021 | 12:44 PM
image

-சுபத்ரா

“கிழக்குமுனையம் இந்தியாவுக்கே வழங்கப்படும் என்று பகிரங்கமாக வாக்குறுதி அளித்த ராஜபக்ஷவினரின் அரசாங்கம் தொடர்ச்சியாக இழுத்தடித்து கடைசியில் காலை வாரியிருக்கின்றது. 

இதனால் இலங்கையிடம் மீண்டும் ஒரு தடவை ஏமாந்துள்ள பிராந்திய வல்லரசாககாட்டிக்கொள்ளும் இந்தியாவுக்கு இம்முறை ‘மரணஅடி’ விழுந்திருக்கின்றது”.

கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியிருக்கிறது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு வியூகங்களும், மோடியின் ‘வக்சின்’ இராஜதந்திரமும், இலங்கை அரசாங்கத்தினால், தோற்கடிக்கப்படும் நிலைக்கு வந்திருக்கிறது.

கிழக்கு முனைய விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள், அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றி என்று கூறியிருக்கிறார் அமைச்சர் விமல் வீரவன்ச.

அதுமட்டுமன்றி, இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர்,  அமைச்சரவையில் உள்ள 95 சதவீதமானோர், கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசாங்கம், தான் ஏற்கனவே எடுத்த முடிவை இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்படுத்துவதில் உறுதியான தீர்மானத்தை எடுத்திருக்கிறது.

மக்களின் ஆணை, தொழிற்சங்கப் போராட்டங்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டை மீறியிருக்கிறது கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம்.

கிழக்கு முனையத்தில் 49 சதவீதம் முதலீடுசெய்வதற்கு, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடமளிக்க முன்வந்திருந்தது முன்னைய அரசாங்கம்.

அந்த முத்தரப்பு உடன்பாட்டை மதிப்பதாகவும், இந்தியாவுக்கே அது வழங்கப்படும் என்றும் பகிரங்கமாக வாக்குறுதி அளித்த தற்போதைய அரசாங்கத்தை நம்பி ஏமாந்துபோய் நிற்கிறது இந்தியா.

இந்தியா இவ்வாறு இலங்கையின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து நிற்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றிய வாக்குறுதியைக்கொடுத்தது.  13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வுகாண்பதாக, வாக்குறுதிகொடுக்கப்பட்டது.

போருக்குப் பின்னர் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்குவது பற்றிய வாக்குறுதிகளையும் கொடுத்தது. இவை மாத்திரமன்றி, இந்திய மீனவர்களின் பாதுகாப்பு விடயத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும்கூட இலங்கை காப்பாற்றவில்லை.

இலங்கையின் இவ்வாறான வாக்குறுதிகளை மீறும் அணுகுமுறைகள், இந்தியாவுக்கு புதிதான ஒன்று அல்ல. இந்தியா இம்முறை மிகவும் மோசமாக ஏமாற்றப்பட்டிருக்கிறது.

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று தற்போதைய அரசாங்கம் ஒரு தீர்மானத்தை முன்னரே எடுத்திருந்தது. விட்டுக் கொடுப்பது போன்று போக்குக் காட்டிக் கொண்டே, இழுத்தடித்து, இழுத்தடித்து கடைசியில் காலை வாரி விட்டிருக்கிறது.

இது பிராந்திய, சர்வதேச வல்லரசாக காட்டிக் கொள்ளும் இந்தியாவுக்கு விழுந்த மரண அடி என்று கூறலாம்.

இவ்வாறான ஒரு முடிவை எடுக்க இலங்கை அரசாங்கம் தயாராவதை அறிந்த இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையின் மூலம், முத்தரப்பு உடன்பாட்டை எல்லாத் தரப்புகளும் மதிக்க வேண்டும். வாக்குறுதிகளை காப்பாற்றவேண்டும் என்று கூறியிருந்தது.

ஆனாலும், அமைச்சரவைக் கூட்டத்தில் எந்தக் குழப்பமும் இல்லாமல், உடன்பாட்டை முறித்துக்கொள்ளும் முடிவை எடுத்துவிட்டு, இதுபற்றி இந்தியா அதிகம் கவலைகொள்ளாது என்ற தொனியில் அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கம்போல இந்தியாவை சமாளித்து விடலாம்(ஏமாற்றி) என்று அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவுக்கு இது பெரும் அவமானம். சில ஆண்டுகளுக்கு முன்னர் மாலைதீவு விமான நிலைய அபிவிருத்தித்திட்டத்தை, முன்னெடுத்துக்கொண்டிருந்த இந்திய நிறுவனம், திடீரென அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.

சீன சார்புடைய முன்னைய மாலைதீவு அரசாங்கம் இந்தியாவின் கழுத்தைப்பிடித்து எவ்வாறு வெளியேற்றியதோ, அதுபோலத்தான் இப்போது இலங்கையிலும் ஏற்பட்டிருக்கிறது.

கிழக்கு முனையத்துக்குப் பதிலாக, மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கலாம் என்பதுபோல அமைச்சர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபற்றி இந்தியாவுடன் கலந்துரையாடல்கூட நடத்தப்படவில்லை. உடன்பாடு முறித்துக் கொள்ளப்பட்டது குறித்தும், இதைப்பற்றி எழுதப்படும் வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கிழக்கு முனையம் இலங்கைக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அது முழுமையாக அரசாங்கத்திடமே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் உதயகம்மன்பில.

சரி, கிழக்கு முனையம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், மேற்கு முனையம் மட்டும் எவ்வாறு அத்தகைய முக்கியத்துவம் இல்லாமல் இருக்க முடியும்?

அதனை எவ்வாறு இந்தியாவிடம் கொடுப்பதற்கு முற்படலாம்?

அதனை ஒப்படைக்க முனையும்போது, தேசக்திகள் எதிர்ப்பை வெளிப்படுத்த முனையாதா? என்ற கேள்விகள் எழுவது இயல்பு.

இந்தியாவுக்கு தேவை கொழும்பு துறைமுகத்தில் ஒரு இடமே தவிர, அது எந்த முனையம் என்பதல்ல என்ற கோணத்தில் சிலர் சிந்திக்கிறார்கள்.

ஆனால், இந்தியா கிழக்கு முனையத்தை இரண்டு விதமாக பார்க்கிறது. 

முதலாவது அதன் கேந்திர முக்கியத்துவம். இரண்டாவது தனதுநாட்டின் கௌரவம்.

கிழக்கை விட்டுக் கொடுத்து மேற்கை கைப்பற்றுவதானது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக அனுகூலமானதெனக் கூறப்படலாம். 

ஏனென்றால், அங்கு 85 வீத முதலீட்டை செய்வதற்கும், 35 ஆண்டுகள் அதனை நிர்வகிக்கும் உரிமையை வழங்குவதற்கும், அரசாங்கம் தயாராக இருப்பது போலக் கூறப்படுகிறது.

ஆனால், மேற்கு முனையம் இன்னமும் ஒரு கற்பனைத் திட்டம் தான். 

அங்கு இனிமேல் தான் எல்லாவற்றையும் தொடங்க வேண்டும். சாத்திய ஆய்வு, சுற்றுச்சூழல் அனுமதி, அரசாங்கத்தின் ஒப்புதல், உடன்பாடுகள், இவற்றையெல்லாம் தாண்டி திட்டத்தை ஆரம்பிக்கவே சில ஆண்டுகளாகிவிடும்.

அதனை நிறைவேற்றிமுடிக்க இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும்.

ஆனால் கிழக்கு முனையம் அவ்வாறானதல்ல. கிழக்கு முனையம் ஏற்கனவே 450 மீற்றர் நீளமான துறைமுக மேடையுடன் உள்ளது.

அதனை நீடிப்பதும், அபிவிருத்தி செய்வதும்தான் எஞ்சியிருக்கும் வேலை.

இலங்கை அரசே இதனை மூன்று கட்டங்களாக 3 ஆண்டுகளில் நிறைவேற்றப் போவதாக கூறியிருக்கும் நிலையில் இந்திய நிறுவனம் இதனை இரண்டு ஆண்டுகளில் முடித்துக் கொள்ளும்.

கிழக்கு முனையத்தை இந்தியா விரைவாக அபிவிருத்தி செய்வதால் இந்தியாவுக்கே அதிக நன்மை கிடைக்கும்.

ஏனென்றால், கொழும்பு துறைமுகத்துக்கு வரும் 70 சதவீதமான கொள்கலன்கள், இந்தியாவுடனான வர்த்தகத்துடன் தொடர்புடையவை.

இந்தியாவின் துறைமுகங்களில் தரிக்க முடியாத பாரிய கொள்கலன், கப்பல்களில் ஏற்றப்படுவற்காக, கொழும்பு துறைமுகத்தை இந்தியா பயன்படுத்துகிறது.

கிழக்கு முனையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், பாதுகாப்பான அதேவேளை தனது கொள்கலன்களின் போக்குவரத்தை இலகுபடுத்த முடியும் என்று இந்தியா கருதுகிறது.

இதனால் நேரடியாகப் பாதிக்கப்படக் கூடியது சீனா தான். கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தின் 85 சதவீத உரிமையை சீனா வைத்திருக்கிறது.

பாரிய கொள்கலன்களை ஏற்றி இறக்கக் கூடிய வசதி அங்கு தான் உள்ளது. 

இதனால் இந்த கொள்கலன் முனையத்துக்கு செல்லும் இந்திய கொள்கலன்களால் கிடைக்கும் இலாபம் சீனாவுக்கு சென்று சேர்கிறது.

இதுதான் இந்தியா கிழக்கு முனையத்தை விரும்புவதற்கு ஒரே காரணம் அல்ல. தெற்கு முனையமும், கிழக்கு முனையமும் அடுத்தடுத்து உள்ளன.

கிழக்கு முனையத்தை சற்று கடலுக்குள் நீட்டும் போது, தெற்கு முனையத்துக்கு வரும் கப்பல்களை இந்தியாவினால் சுலபமாக கண்காணிக்க முடியும்.

சீன நீர்மூழ்கிகள், கப்பல்கள் தெற்கு முனையத்தில் தான் தரித்து நிற்பது வழக்கம். 

கிழக்கு முனையத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் சீனாவை இலகுவாக கண்காணிக்கலாம் என்று இந்தியா கருதுகிறது.

இதனை விட்டு, விட்டு வரைபடங்களில் மாத்திரமே உள்ள மேற்கு முனையம் ஒன்றைக் காட்டி இந்தியாவை ஏமாற்ற முனைந்திருக்கிறது கொழும்பு.

இந்தியா கொழும்பு துறைமுகத்தை விரும்புவது, தனியே பொருளாதார நோக்கங்களுக்காக என்றால், மேற்கு முனையத் திட்டத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும்.

ஆனால், இந்தியா கிழக்கு முனையத்தை விரும்புவதற்கு அதன் கேந்திர முக்கியத்துவமும் ஒருகாரணம். அதனால்தான், இந்தியா இந்த விடயத்தில் பிடிவாதமாக உள்ளது.

அதேவேளை, இந்த விவகாரத்தில் ஏற்படக்கூடிய தோல்வி இந்தியாவின் புகழுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. 

அதுவும் சீனாவுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் ஏற்படும் தோல்வியை இந்தியாவினால் இலகுவில் ஜீரணித்துக்கொள்ள முடியாது.

அவ்வாறான ஒரு தோல்விக்கு இந்தியா தயாராகப் போகிறதா? அல்லது தன் பலத்தைக் காட்டி கிழக்கு முனையத்துக்காக முட்டிமோதப் போகிறதா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22