(ஆர்.ராம்)
தற்போது ஆட்சியில் இருப்பவர்களிடத்தில் காணப்படும் பெரும்பான்மை வாதம் பேரினவாதமாக உருவெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டப் பேரணி மூன்று இனங்களினதும் பங்கேற்பில் தடைகளைக் கடந்து முன் சென்றுகொண்டிருப்பது அரசாங்கத்திற்கு தெளிவான செய்தியை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய இன மக்கள் தாமும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் நியாயமான உரிமைகளை வழங்குமாறு கோரியே போராடுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றவாறு வீரகேசரி வாரவெளியிட்டுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

தற்போதைய அரசாங்கம் சிங்கள, பௌத்த பெரும்பான்மை மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டதாகும். அதன் காரணமாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டவர்களிடத்தில் பெரும்பான்மை வாதம் காணப்பட்டே வந்தது. ஆனால் இந்த நிலைமையானது காலபோக்கில் பேரினவாதமாக உருவெடுக்கும் நிலையை எட்டியிருக்கின்றது. 

73ஆவது சுதந்திர தின வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது பௌத்த சித்தாந்த நிலைப்பாடுகளையும், ஆட்சிபுரியும் முறைமையையும் உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கின்றார். 

நாட்டின் நிலைமைகளை உணர்ந்து கொள்வதற்கு அவருடைய உரையொன்றே போதுமானதாக உள்ளது. இந்த நாடு பல்லின, சமூக கலாசரங்களைக் கொண்டதாகும். இங்கு அனைத்து இனக்குழுமங்களுக்கும் சம அந்தஸ்து காணப்பட வேண்டும். அவர்களுக்கான உரிமைகள் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும். 

இதுவே நீண்டகாலமான கோரிக்கையாக இருக்கின்றது. ஆனால் ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. குறிப்பாக மலைய மக்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. அந்த விடயம் தீர்க்கப்படாது அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முஸ்லிம் சமூகத்தினது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக வலிந்து தகனம் செய்யப்படுகின்றது. இதனால் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. 

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் 7 தசாப்தமாக போராடி வருகின்றார்கள். அவர்களுக்கான நீதியான செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் பொத்துவில் தொடக்கம் பொலி கண்டி வரையில் அஹிம்சை வழியில் எமது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் கூறுவதற்காக போராட்டப்பேரணியை முன்னெடுப்பதென தீர்மானித்திருந்தோம். 

அதன்படி முதல்நாளில் பல்வேறு தடைகளைக் கடந்து பாராளுமன்ற உறுப்பினர்களான கலையரசன், சாணக்கியன் ஆகியோரின் தற்துணிவான செயற்பாடுகளால் வெற்றிகரமான பேரணியை நடத்தியிருந்தோம். அதன் பின்னர் ஏனைய அரசியல் கட்சிகள் உள்ளிட்டவர்கள் எம்முடன் கரம் கோர்த்தனர்.

அதுமட்மன்றி முஸ்லிம், மலையக சமூகங்களும், அவர்களின் பிரதிநிதிகளும் பேராதரவு அளித்தார்கள். இவ்வாறான நிலையில் இன்று பேரணி பொலிகண்டியை நோக்கி செல்லவுள்ளது. 

அஹிம்சைவழியான பேரணியை தடுக்க முடியாது. அது ஜனநாயக உரிமையாகும். அதில் அனைவரும் ஒருமித்து பங்கேற்று எமது கோரிக்கைகளை வலுவாக முன்வைக்க வேண்டும் என்றார்.