கராப்பிட்டிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பிற்காக ஸ்ரீமதி சிவானந்தி ஹரிதர்ஷனின் (நிர்தனா நடனப் பள்ளி) மாணவி தக்‌ஷாயினி ஜெயராஜினால் நடத்தப்படும் பரதநாட்டிய நிகழ்வு (பாதயாத்திரை) (Dance for trail) எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

காலஞ்சென்ற எம். பாலசுப்பிரமணியத்தின் ஞாபகார்த்தமாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் தக்‌ஷாயினி ஜெயராஜின் பரதநாட்டியம், தனி குரல் உட்பட கிருஷ்ண பெரிமானின் லீலைகளை விளக்கும் “சொன்னது என்ன”, சிவபெருமான் பற்றிய வர்ணம், பதம் – மீனாட்சி அம்மனின் நவரசங்கள், பதம் – சிவபெருமான் பற்றியது, தில்லானா ஆகிய 6 கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

புற்றுநோய் வைத்தியசாலைகளுக்கு நிதி சேகரிக்கும் முகமாகவும் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வு புற்றுநோய் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.  

2011 ஆம் ஆண்டு தெற்கே தோந்திராவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பரதநாட்டிய பாதயாத்திரை 27 நாட்களில் பருத்தித்துறையை சென்றடைந்தது. இதற்கு 30 ஆயிரத்திற்கு அதிகமானோர் ஆதரவு வழங்கியிருந்தனர். இதன் மூலம் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சேகரிக்கப்பட்டது.

இதனையடுத்து 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச தரத்துடனான பரீட்சார்த்த புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை தெல்லிப்பளையில் திறந்து வைக்கப்பட்டது. தற்போது குறித்த வைத்தியசாலையில் 4500க்கும் அதிகமான புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி அடுத்தக்கட்டமாக கராப்பிட்டிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்காக பரதநாட்டிய பாதயாத்திரை மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பருத்தித்துறையிலிருந்து தோந்திராவிற்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.