சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புகளின் எஞ்சியுள்ள பெறுமதியின் 50 சதவீத தொகையை வாடிக்கையாளர்களுக்கு மீள்கொடுப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இவ்விடயம் தொடர்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின் ஊடாக இதுபற்றி ஏற்கனவே கூறப்பட்டிருந்தவாறு,  நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்தின் மேற்பார்வையின் கீழ் கம்பனியின் எஞ்சியுள்ள வைப்புக்களின் 50 சதவீதம் வரையான மீள்கொடுப்பனவு நோக்கத்திற்காக மாத்திரம் நிபந்தனையுடனான அடிப்படையொன்றில் மட்டுப்படுத்தப்பட்ட காலமொன்றிற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வியாபாரத்தினை மீள ஆரம்பிப்பதற்கான கட்டளை வழங்கப்பட்டது.

 அதன்படி  சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி அத்தகைய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துள்ளது. அதற்கமைய, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட 30 சதவீத மீள்கொடுப்பனவு மற்றும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தகைமையுடைய நட்டஈடு என்பவற்றைக் கழித்ததன் பின்னர் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புகளின் எஞ்சியுள்ள பெறுமதியின் 50 சதவீதம் இம்மாதம் 3ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்து மீள்கொடுப்பனவு செய்யப்படும்.