(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அடிப்படை சம்பளமாக 725 ரூபாவை வழங்குவதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் 2015 முதல் 6 வருடங்களாக நிறைவேற்றப்படாமலுள்ள கோரிக்கையான 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை  வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் வெறுமனே பெருந்தோட்டத் தொழிலாளர்களது பங்களிப்பில் மாத்திரமின்றி எவ்வித பேதமுமின்றி அனைவராலும் வழங்கப்பட்ட ஒத்துழைப்பால் முழு மலையகத்தையும் ஸ்தம்பிதமடையச் செய்திருந்தது

இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அழைப்பு விடுத்திருந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு கட்சி , தொழிசங்க பேதமின்றி சகல தரப்பினரும் இதற்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.

அத்தோடு இதற்கு ஆதரவளிக்கும் முகமாக வர்த்தக சங்கங்கள் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தமை , மலையக பகுதிகளில் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் சென்றிருந்தமை, தபாலகங்கள் , தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தமை இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு வலிசேர்ந்திருந்தன.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை மதியம் 2 மணியவில் தொழில் அமைச்சில் சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது.

இதில் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் , கூட்டு ஒப்பந்த்தில் கையெழுத்திடுகின்ற தொழிற்சங்கள் , ஏனைய தொழிற்சங்கள் மற்றும் அரசாங்கத்தின் பிரநிதிகள் கலந்து கொள்வர்.

தொழில் ஆணையாளர் தலைமையில் கூடவுள்ள சம்பள நிர்ணய சபையில் அடிப்படை சம்பளம் 900 ரூபாய் எனவும் வாழ்க்கை செலவு 100 எனவும் அதற்கமைய நாள் சம்பளம் 1000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கு அழுத்த பிரயோகிக்கும் வகையிலேயே இன்றைய போராட்டம் அமைந்திருந்தது.

ஸ்தம்பித்த மலையகம்

வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் , பொகவந்தலாவை, கொட்டலை, நோர்வூட், மஸ்கெலியா மற்றும் தலவாக்கலை உள்ளிட்ட பிரதான நகரங்களில் இன்று சகல கடைகளும் அடைக்கப்பட்டன. அத்தோடு கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். இந்த நகரகங்களில் தனியார் பஸ் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சில பாடசாலைகளும் மூடப்பட்டன

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மலையத்தில் சில பாடசாலைகள் இன்று மூடப்பட்டன.

இதனால் மாணவர்கள் பாடசாலைகளுக்கு சென்று மீண்டும் வீடுகளுக்கு திரும்பியிருந்தனர். இவ்வாறு பாடசாலைகள் மாத்திரமின்றி தபாலகங்கள் மற்றும் ஆடை தொழிற்சாலைகளும் கூட இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு வலு சேர்த்திருந்தன.

இந்நிலையில் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரதான தொழிற்சங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் , தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு என்பவை தமது நிலைப்பாடுகளை தெரிவித்திருந்தன.

இலங்கை தொழிலாளர் காங்ரஸ் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில் ,

பாரிய இலக்கை நோக்கி எமது போராட்டம் ஆரம்பித்துள்ளது. இதற்கு பலரதும் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகின்றேன்.

திங்களன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சிறந்த தீர்வொன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். எம் அனைவரதும் ஒற்றுமை வெற்றிக்கான காரணியாகும் என்றார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவிக்கையில் ,

இன்று மலையகம் முழுவதிலும் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் திங்களன்று சம்பள நிர்ணயசபையூடாக சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

இதில் 900 ரூபாய் அடிப்படை சம்பளம் மற்றும் 100 ரூபாய் வாழ்க்கை செலவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திங்களன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது வருடத்தில் 300 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் , மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட நிபந்தனைகளை உள்ளிடக்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படுவதோடு சம்பள அதிகரிப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் அழுத்தமாக வலியுறுத்துவோம் என்றார்.

பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் கூறுகையில் ,

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வுக்காக இன்று ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள வேலை நிறுத்த போராட்டம் முழுமையான வெற்றியை அளித்துள்ளது. இப் போராட்டத்தில் பல்வேறுபட்ட தொழிற்சங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்க பேதங்களை மறந்து கலந்து கொண்டமையானது இப் போராட்ட வெற்றிக்கு வலு சேர்த்துள்ளது.

தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் ஒன்று திரண்டு போராட முனைந்தது தொழிலாளர்கள் மத்தியில் இன்றும் போராட்ட உணர்வு மேலோங்கி உள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதன் மூலம் தோட்ட கம்பனிகளின் வரட்டு பிடிவாதமும் அடக்கு முறைகளையும் முறியடிக்கக் கூடியதாகவிருக்கும். இந்த போராட்டத்தின் மூலம் சம்பள நிர்ணய சபையில் நடத்தப்ப்படும் சம்பள உயர்வு போராட்டம் முழுமையான வெற்றியை அடையும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

மாவத்தகமவில் ஆர்ப்பாட்டம்

இன்று வெள்ளிக்கிழமை மாவத்தகம கிராம மக்களால் 1000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'பேச்சு வார்த்தைகள் இன்றியோ அல்லது ஆர்பாட்டங்களை முன்னெடுக்காமலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதில்லை. மாறாக சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுத்துள்ளோம் என்று யாரேனும் கூறுவார்களாயின் அது பாரிய பொய்யாகும்.

இவ்வாறு தொடர்ச்சியாக பொய் கூறி எம்மை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.' என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருந்தோட்ட தொழிலாளியொருவர் கூறினார்.