நீர்கொழும்பு, கட்டானை, கட்டுநாயக்க மற்றும் ரத்தொழுகமை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் தொழிலுக்குச் செல்லும் மற்றும் பாதையில் பயணிக்கும் பெண்களின் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய தங்க நகைகளைப் பறித்த ‘கியர் தொலஹ’ எனப்படும் நபர் ரத்தொழுகமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாகொன்னை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய  ரசிக்க சமிந்த (‘கியர் தொலஹ’ என்ற பெயரில் அழைக்கப்படுபவர்)   நபரே கைது செய்யப்பட்டுள்ளவராவார். மேலும் கொள்ளையடிப்பதற்காக பாவித்த மோட்டார் சைக்கிளை வைத்து சட்டவிரோத மதுபான விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளார்.

கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய நகைகளை மீட்க விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதற்காக  எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான்   உத்தரவிட்டார். 

இச்சம்பவம் தொடர்பாக ரத்தொழுகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நந்தலால் பத்மநாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.