பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாட் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள அடையாள வேலைநிறுத்தப்  போராட்டத்திற்கு இலங்கை மலையக மன்றம் தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மலையக மன்றம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது பெற்றோர்களாகிய பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு ‘இலங்கை மலையக மன்றம்’ தமது முழு ஆதரவையும் தெரிவிப்பதுடன் இந்த போராட்டத்தில் அரசியல் விருப்புவெறுப்புக்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து எமது உறவுகளின் போராட்டத்தை வலுப்படுத்துமாறு வேண்டுகிறோம்.

உண்மையில் ஜனாதிபதி அல்லது  பிரதமர் எமது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், ஒரு உறுதியான அரசாங்கமாக? திடமான ஒரு முடிவை எடுக்கும் பட்சத்தில் ஒரே நாளில் இந்த சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்திருக்கலாம் என்பதே எமது நிலைப்பாடு.

ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்கும் பட்சத்தில் அது அந்த நிறுவன முகாமைத்துவத்திலுள்ள பிரச்சினை. அதற்கு தொழிலாளர்கள் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை.

ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிலாளர்கள் எண்ணிக்கை போதியளவு இல்லாத பிரச்சினையே காணப்படுகிறதே தவிர, எந்த தோட்டத்திலும் தொழிலாளர்கள் தேவைக்கு அதிகமாக இருக்கிறார்கள் என்ற நிலை இல்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்க டொலரின் பெறுமதி இரு மடங்கு அதிகரித்துள்ளது. 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் தேயிலை உற்பத்தி 100% அதிகரித்துள்ளது.

ஆக நிறுவனங்கள் கடந்த காலத்தை விட பல மடங்கு வருமானத்தை அதிகமாக பெற்றுவருகின்றன. உற்பத்தி பாதியளவு குறைந்தாலும் கூட கடந்து பத்து வருடத்தில் ஏற்பட்ட டாலர் பெறுமதி அதிகரிப்பினால் இலாபம் அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை.

தோட்ட தொழிற்சங்கங்கள் கடந்த ஐந்து வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாமல், தொழிலாளர்களையே போராட வேண்டிய நிலைக்குள் தள்ளியிருப்பது கவலைக்குறிய விடயம்.

இன்று நடைபெறும் போராட்டத்தை அரசியலாக்காமல் சரியான வழியில் கொண்டுச்சென்று மக்களுக்கான தீர்வை உரியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.