வெளி விவகார அமைச்சு கண்டியில் பிராந்திய கொன்சியூலர் அலுவலகமொன்றை திறக்கவுள்ளது.

வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வழிகாட்டுதலின் கீழ், பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளின் செயற்றிறனையும், செயலாண்மையையும் மேம்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பான 'நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செழிப்பான பார்வை' எண்ணக்கருவிற்கு உத்வேகமளிக்கும் முகமாக, பிராந்திய கொன்சியூலர் அலுவலகமொன்றை வெளிநாட்டு அமைச்சு நாளை பிற்பகல்  2.00 மணிக்கு கண்டியில் திறந்து வைக்கவுள்ளது.

பேராதனை, கட்டம்பேயில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகமானது, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவின் முன்னிலையில் அமைச்சர் குணவர்தன அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும்.

இந்த கொன்சியூலர் அலுவலகத்தைத் திறந்து வைப்பதானது, மத்திய மாகாணம் மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்குச் செல்லாமல் கொன்சியூலர் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கும்.

பொதுமக்களுக்காக விரிவுபடுத்தப்பட வேண்டிய கொன்சியூலர் சேவைகளில் வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கான பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், கல்வி மற்றும் ஏனைய சட்ட ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துதல், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிகளை வழங்குதல், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களின் நிவாரண மற்றும் இழப்பீட்டுக் கோரிக்கைகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து மனித உடல்களை திருப்பிக் கொண்டு வருதல் ஆகியன உள்ளடங்கும்.