இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 

இதில் முதலவதாக நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். 

கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அரங்கேறும் இந்த டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்திய அணி சமீபத்தில் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. 

அணித் தலைவர் விராட் கோலி முதல் டெஸ்டுடன் விலகிய நிலையில் ரஹானே தலைமையில் இந்திய அணி பிரமாதப்படுத்தியது. தற்போது விராட் கோலி அணிக்கு திரும்பியிருப்பதால் பேட்டிங் வரிசை மேலும் வலுவடைந்துள்ளது.

சென்னை ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு உகந்தது. இறுதி இரு நாளில் பந்து அதிகமாக சுழன்று திரும்பும். அதனால் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழல் ஜாலத்தை எதிர்பார்க்கலாம். 

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த மாதம் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்திய கையோடு மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவில் கால்பதித்து இருக்கிறது. 

30 வயதான ஜோ ரூட் எப்போதும் ஆசிய மண்ணில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர். அவர் தான் இங்கிலாந்து பேட்டிங்கின் முதுகெலும்பாக இருக்கிறார். இலங்கை தொடரில் கூட 228, 186 ஓட்ட வீதம் விளாசியிருந்தார்.

மேலும், இது அவருக்கு 100 ஆவது டெஸ்ட் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். 

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே நியூசிலாந்து தகுதி பெற்று விட்ட நிலையில் மற்றொரு அணி எது என்பது இந்த தொடரின் மூலம் தெரிய வரும். 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி குறைந்தது 2-0, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றாக வேண்டும். இங்கிலாந்து அணி இறுதி சுற்றை எட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக 3 டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.