வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரைக்குமான கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும்  முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று (04.02.2021)  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது..

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டியும் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் கந்தசாமிமலை தென்னமரவாடி, குருந்தூர்மலை, நீராவியடி, கொக்கிளாய்,வெடுக்குநாறி, கன்னியா வெந்நீரூற்று, மயிலத்தமடு போன்ற தமிழர் பிரதேசங்கள் - சிங்கள ஆக்கிரமிப்புக்குட்பட்டு, தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களும், பாரம்பரிய அடையாளங்களும் சின்னங்களும் திட்டமிட்டு அடாத்தாக அபகரிக்கப்படுகின்ற விடயங்களையும்.

தமிழ் மக்களின் பாரம்பரியநிலங்களைச் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து மகாவலித்திட்டம், தொல்பொருள் ஆய்வுத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்ற போர்வையில் சிங்களக்குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சிங்கள ஆக்கிரமிப்பை விரிவுபடுத்துவதையும் பார்த்தும் சர்வதேசம் பாராமுகமாகவே இருப்பது எமக்கு கவலையளிக்கின்றது. 

தையிட்டி விகாரையமைப்பு போன்ற செயற்பாடுகளினூடாக தமிழர் பிரதேசங்களில் சிங்கள பௌத்த மயமாக்கல் திணிக்கப்படுகின்றது.

சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசானது, சிறிலங்காவை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடாக பிரகடனப்படுத்தும் நோக்கில், சிங்கள பௌத்தம் அல்லாத மற்ற அனைத்து இனங்களையும் மதங்களையும் அழிக்கும் நோக்கில் வெளிப்படையாகவே செயற்பட்டு வருகின்றது.

தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இன்றைய கால சூழலில், தமிழர்களின் சுதந்திரத்தை நசுக்கி எம்மை அடிமைகளாக வைத்திருக்கக்கூடிய சிறிலங்காவின் சுதந்திரதினத்தை தமிழ் மக்களாகிய நாம் புறகணிக்கின்றோம். 

எனவே சிறிலங்காவின் சுதந்திரதினம் என்பது தமிழர்வரலாற்றில் கரிநாளாகவே உள்ளது. 

இந்த உண்மைகளை சர்வதேசம ; புரிந்துகொண்டு, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த சர்வதேசம் துணைநிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என போராட்ட காரர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்த காவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.