பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கம்பனிகளுக்கு அழுத்தம் பியோகிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை பெருந்தோட்ட தொழிலாளர்களால் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இவ்வேலை நிறுத்த போராட்டத்திற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 725 ரூபாவாகவும் ஏனைய கொடுப்பனவுகளுடன் 1108 ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவதாகவும் குறிப்பிட்டு முதலாளிமார் சம்மேளனம் செவ்வாயன்று அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானிடம் கேட்டபோது, 

பெருந்தோட்டக்கம்பனிகளைப் பொறுத்தவரையில், அவை தோட்டத்தொழிலாளர்களை வெறுமனே தேயிலை பறிப்பதற்கான கருவிகளாக மாத்திரமே பார்க்கின்றன.

அவர்களுக்குரிய சம்பள உயர்வை வழங்காமல் தொடர்ந்தும் தட்டிக்கழித்து வருகின்றன. எனவே சம்பள உயர்வை வலியுறுத்தி இன்றையதினம் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஊடாக கம்பனிகளின் மீது வலுவானதொரு அழுத்தம் பிரயோகிக்கப்படும் .

அரசாங்கத்தில் அங்கம் வகித்தபோதிலும் நியாயமான விடயங்களுக்காக கடந்த காலங்களிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் தொழிற்சங்கப் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இம்முறை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, கம்பனிகளின் மீது வலுவானதொரு அழுத்தத்தைப் பிரயோகிக்கும் நோக்கிலேயே இந்த வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருக்கின்றோம்.

கம்பனிகள் கபடத்தனமாக செயற்பட்டு, தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்காமல் தட்டிக்கழித்து வருகின்றன.

அவை தோட்டத்தொழிலாளர்களை வெறுமனே தேயிலை பறிப்பதற்கான கருவிகளாக மாத்திரமே பார்க்கின்றன. இந்நிலையில் இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தின் ஊடாக கம்பனிகளின் மீது வலுவான அழுத்தமொன்று பிரயோகிப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வீரகேசரிக்கு கூறுகையில்,

வேலை நிறுத்தம் அல்லது போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது தொழிற்சங்கங்களின் உரிமை என்பதோடு தமது உரிமைக்காக போராடுவது மக்களின் உரிமையாகும். 

எனவே இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவோ அல்லது அதனை புற்றகணிப்பதாகவோ நாம் அறிவிக்கப் போவதில்லை. காரணம் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் என்பது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட்ட தற்போதைய அரசாங்கத்தின் வரவு - செலவு திட்டத்தின் உள்ளடக்கமாகும்.

எனவே அரசாங்கம் கம்பனிகளையும் கூட்டு ஒப்பந்தத்தையும் காரணம் காட்டிக் கொண்டிருக்காமல் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எனவே அரசாங்கம் கூறியபடி இந்தாண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டிருக்காவிட்டால் பெருந்தோட்டப்பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்றார்.

பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதனிடம் இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து கேட்ட போது, 

பெருந்தோட்ட மக்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபாவும் போதாது. அவர்களது வாழ்க்கை செலவினடிப்படையில் பார்க்கும் போது அது மிகவும் குறைந்த தொகையாகும். எனவே  அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும். 

கம்பனிகள் முன்வைத்த யோசனைகளுக்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இணக்கம் தெரிவித்துள்ளவாறான செய்திகளும் வெளியாகியுள்ளன. இவ்வாறு பெருந்தோட்ட மக்கள் ஏமாற்றப்படக் கூடாது. எனவே தான் எமது தொழிற்சங்கமும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறது என்றார்.

இந்த போராட்டத்திற்கு  ஐக்கிய தேசியக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, ஆசிரியர் சங்கங்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் உள்ளிட்ட மேலும் பல்வேறு தரப்பினர் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இந்தநிலையில், நாட்டின் பல்வேறு பாகங்களில் இதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தழிழ் கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான மாபெரும் போராட்டத்திலும் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் 1000 அடிப்படைச் சம்பள கோரிக்கைக்கும் ஆதரவு தெரிவித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.