(செ.தேன்மொழி)

வெல்லம்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சந்தேக நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதுத் தொடர்பில்  அவர் மேலும் கூறியதாவது,

வெல்லம்பிட்டி - வெலேவத்த பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்ய சென்றிருந்தனர். 

இதன்போது சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதுடன் , பொலிஸார் அவர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபரின் கால் பகுதியில் துப்பாக்கி தோட்டா துளைத்துள்ளதுடன் , அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் தங்கச் சங்கிலிகள் கொள்ளையிடப்பட்டு வருவதாக அண்மை காலமாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டு வருவதுடன், அதுத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய இந்த கொள்ளை சம்பவங்களை நான்கு பேரைக் கொண்ட குழுவினரே திட்டமிட்டு செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் , அவர்களுள் ஒருவரை கைது செய்வதற்கே பொலிஸார் இவ்வாறு சென்றுள்ளனர்.

இதன்போது 35 வதுடைய சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதுடன் , சந்தேக நபரை தடுப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.  மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.