(செ.தேன்மொழி)

மாலபே பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்ணை தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தலங்கம பொலிஸாருந்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய , மாலபே - ஜயமாவத்த பகுதியில் சொகுசு வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அந்த வீட்டிலிருந்து 7 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது நவீன வகை இரண்டு கார்களும் , வேன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளுக்காக சந்தேக நபர்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான பெண்ணும் அவரது கணவரும் இதற்கு முன்னர் போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

பெண்ணின் கணவரான நந்தகுமார் சிவநாதன் எனப்படும் நபர் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன் , பொலிஸார் அவரையும் தேடிவருகின்றனர்.

பிரான்ஸில் வசித்துவருவதாக கூறப்படும் ரூபன் மற்றும் இத்தாலியில் வசித்து வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிருவரின் ஆலோசனைக்கமையவே இவர்கள் இவ்வாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

தலங்கம பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவும் எதிர்ப்பார்த்துள்ளனர்.