(நா.தனுஜா)

பெருந்தோட்டக்கம்பனிகளைப் பொறுத்தவரையில், அவை தோட்டத்தொழிலாளர்களை வெறுமனே தேயிலை பறிப்பதற்கான கருவிகளாக மாத்திரமே பார்க்கின்றன.

அவர்களுக்குரிய சம்பள உயர்வை வழங்காமல் தொடர்ந்தும் தட்டிக்கழித்து வருகின்றன. எனவே சம்பள உயர்வை வலியுறுத்தி நாளைய தினம் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஊடாக கம்பனிகளின் மீது வலுவானதொரு அழுத்தம் பிரயோகிக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Image result for senthil tondaman virakesari

இவ்விடயம் பற்றி அவர் மேலும் கூறியதாவது:

அரசாங்கத்தில் அங்கம் வகித்தபோதிலும் நியாயமான விடயங்களுக்காக கடந்த காலங்களிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் தொழிற்சங்கப் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இம்முறை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, கம்பனிகளின் மீது வலுவானதொரு அழுத்தத்தைப் பிரயோகிக்கும் நோக்கிலேயே இந்த வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருக்கின்றோம்.

எதிர்வரும் திங்கட்கிழமை சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறும்போது, இப்போராட்டம் கம்பனிகளின் மீது நிச்சயமாக அழுத்தத்தை ஏற்படுத்தும்.

உண்மையில் தோட்டங்களிலிருந்து எதிர்பார்க்கும் அளவிலான கொழுந்துகளைப் பெறுவதற்கு, அதற்குரிய அளவிலான உரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

எனினும் தோட்டக்கம்பனிகள் அத்தகைய பராமரிப்பை சரிவர முன்னெடுக்காமையினால் எதிர்பார்த்த வெளியீட்டைப் பெறமுடியவில்லை. 

எனவே அதற்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்கமுடியாமைக்கும் கம்பனிகளே காரணமாகும்.

அநேகமான தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கம்பனிகள் கூறுகின்றன. ஆனால் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக, அந்தத் தோட்டங்களை கம்பனிகள் தம்வசமே வைத்திருக்கின்றன.

அவ்வாறு நட்டத்தைத் தரும் தோட்டங்களைத் தம்வசம் வைத்திருக்கும் அளவிற்கு கம்பனிகள் சேவைநோக்கில் செயற்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே கம்பனிகள் கபடத்தனமாக செயற்பட்டு, தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்காமல் தட்டிக்கழித்து வருகின்றன.

அவை தோட்டத்தொழிலாளர்களை வெறுமனே தேயிலை பறிப்பதற்கான கருவிகளாக மாத்திரமே பார்க்கின்றன. இந்நிலையில் இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தின் ஊடாக கம்பனிகளின் மீது வலுவான அழுத்தமொன்று பிரயோகிப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.