பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான வாழ்வுரிமையைக் கோரும் அகிம்சை வழி போராட்டம் பொலிஸாரின் தடைகளையும் மீறி இன்று மாலை மட்டக்களப்பை சென்றடைந்தது.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் போராட்டம் இன்று காலை பொத்துவிலில் ஆரம்பமாகி பொலிஸாரின் தடையை மீறி கொட்டும் மழையிலும் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

நாளை காலை மட்டக்களப்பில் ஆரம்பமாகி திருகோணமலையை சென்றடையும்.

தொடர்ந்து நாளைமறுதினம் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் நோக்கி பயணிக்கும் போராட்டம் வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை பொலிகண்டியை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.