(எம்.மனோசித்ரா)

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. முழு உலகும் கொவிட் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் வழமையைப் போன்று கம்பீரம் குறையாத அதேவேளை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தின கொண்டாட்டங்கள் கொழும்பு 7 இல் உள்ள சுதந்திர சுதுக்கத்தில் நடைபெறவுள்ளன.

Sri Lanka Celebrates 71 Years of Independence

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் தேசிய கொடி ஏற்றப்படும் போது சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தைத்தை இசைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவம், கடற்படை,விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புபடை, மற்றும் தேசிய மாணவ படையினரின் பங்குபற்றலுடன் சுதந்திர தின மரியாதை அணி வகுப்பு இடம்பெறவுள்ளது.

மேலும் விசேட பிரமுகர்களாக பன்னாட்டு இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கள மொழியில் தேசிய கீதம்

நல்லாட்சி அரசாங்கத்தின் போது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை இசைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

எனினும் 2019 ஆட்சி மாற்றத்தையடுத்து முதலாவதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்தும் எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தன. 

அடுத்த கொண்டாட்டத்திலேனும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் இம்முறையும் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ள அதேவேளை , அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதுவே இறுதி தீர்மானம் என்னும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத வழிபாடுகள்

இன்று காலை 8 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு முன்னர் சகல மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் காலை 6.30 மணிக்கு விஷேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய பௌத்த மத வழிபாடுகள் காலை 6.30 க்கு நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம விகாரையிலும் , இந்து மத வழிபாடுகள் பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திலும் , 6.35 க்கு இஸ்லாம் மத வழிபாடுகள் கொழும்பு - 4 நிமல்பாதை மஜ்மாயில் கமிராத் ஜூம்மா பள்ளிவாசலிலும் , 7.15 க்கு கிருஸ்தவ வழிபாடுகள் பொரளை தேவாலயத்திலும் நடைபெறும்.

டீ.எஸ்.சேனாநாயக்க நினைவு கூரல்

நிகழ்வின் ஆரம்பத்தில் வழமையாக சுதந்திர தினத்தின்று இடம்பெறும் முக்கிய நிகழ்வாக இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் வைபவம் காலை 7.15 மணிக்கு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் நடைபெறும்.

கொழும்பு மாநகர மேயர் றோசி சேனாநாயக்க , அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் காமினி லொக்குகே ஆகியோரின் பங்குபற்றலுடன் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறும்.

முப்படை மரியாதை அணிவகுப்பு , கலாசார அணிவகுப்பு

அதனையடுத்து முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெறும். இதில் 3171 இராணுவத்தினரும் , 808 கடற்படையினரும் , 997 விமானப்படையினரும் , 664 பொலிஸாரும் , 432 விசேட அதிரடிப்படையினரும் , 558 சிவில் பாதுகாப்புபடையினரும் , 336 மாணவர் பயிற்சி படையினரும் பங்குபற்றுவார்கள். இதனைத் தொடர்ந்து கலாசார அணி வகுப்பு இடம்பெறும். இதில் முப்படை, சிவில் பாதுகாப்புபடை, பொலிஸ், தேசிய இளைஞர் பாதுகாப்புபடை மற்றும் மாகாணசபை கலாசாரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடகக் கலைஞர்கள் உள்ளிட்ட 341 பேர் பங்குபற்றுவார்கள். இதற்கான ஒத்திகைகள் ஜனவரி 29  முதல் நேற்று வரை இடம்பெற்றன.

பங்குபற்றுவோருக்கு கொவிட் பரிசோதனைகள்

வழமையைப் போன்றல்லாது இம்முறை கொவிட்-19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணப்படுவதால் அணிவகுப்புக்களில் கலந்து கொள்ளும் படை வீரர்கள் , ஊடகவியலாளர்கள் , பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட சகலருக்கும் பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டால் தொற்றாளர்களும் அவர்களுடன் முன்னிலையில் தொடர்பைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துகொள்வோர்

சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளன.

மேலும் அமைச்சர்கள் , இராஜாங்க அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அரச தலைவர்கள் , இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்கள் , முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதான அதிகாரிகள் , சர்வ மதத் தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பொது மக்களுக்கு அனுமதியில்லை

இம்முறை கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டளவிலான பங்குபற்றாளர்களுடனேயே சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

எனவே முந்தைய வருடங்களைப் போன்று இம்முறை மக்களுக்கு நேரடியாக அவற்றை கண்டு களிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என்றும் , இலங்கையிலுள்ள சகல தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நேரடி ஒளிபரப்பின் ஊடாக அவற்றை கண்டுகளிக்கலாம் என்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

வழமையான தேசிய கொடி பயன்படுத்தப்படும்

வழமை போன்று இம்முறையும் முன்னர் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடியை சுதந்திர தினத்திற்காக பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

தேசிய கொடியில் சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தி வடிவமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் , அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் இறுதி நடவடிக்கையாக இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். எனவே இம்முறை தேசிய சுதந்திர தின வைபவத்தின் போது முன்னர் பயன்படுத்திய தேசிய கொடியே பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூடப்படும் வீதிகள்

இன்று அதிகாலை 4 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை சுதந்திரதின கொண்டாட்டங்களை முன்னிட்டு சுதந்திர சதுக்க சுற்று வட்டார வீதிகள் மூடப்பட்டிருக்கும்.

எனவே கொழும்பு நகரத்தின் ஊடாக செல்லும் வாகனங்கள் சுதந்திர சதுக்கத்திற்கு முன்னால் உள்ள வீதியை பயன்படுத்தாமல் ஏனைய வீதிகளை பயன்படுத்த முடியும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 பொது போக்குவரத்து பேரூந்துகளுக்கான மாற்று வழிகள்

138 , 120 , 122 மற்றும் 125 என்ற வீதி இலக்கங்களைக் கொண்ட பேரூந்துகள் ,  சொய்சா சுற்று வட்டம், தர்மபால மாவத்தை , ஆனந்த குமாரசாமிமாவத்தை ,பூங்கா ஒழுங்கை ,ராஜகீய மாவத்தை மற்றும் ரீட் மாவத்தை ஊடாக செல்ல முடியும்.

154 இலக்க பேரூந்துகள் மற்றும் ரத்மலானையிலிருந்து  கிரிபத்கொட நோக்கிச் செல்லும் பேரூந்துகள், காலை 6 மணியிலிருந்து முற்பகல் 10 மணிவரை  கல்லறை சுற்றுவட்டம் , புலர்ஸ் வீதி, தும்முல்ல ஊடான வீதியையும் , முற்பகல் 10 மணிதொடக்கம் 12 மணிவரை கல்லறை சுற்றுவட்டம் , மாவத்தை சந்தி , திம்பிரிகஸ்யாய வீதி , ஜாவத்த வீதி , பௌத்தாலோக்க மாவத்தை வீதியையும் பயன்படுத்த முடியும்.

ரத்மலானையிலிருந்து  கிரிபத்கொட நோக்கிச் செல்லும் பேரூந்துகள் முற்பகல் 10 மணி தொடக்கம் பிற்பகல் 12 மணிவரை தும்முல்ல சந்தி , தேர்ஷ்டன் வீதி, பூங்கா வீதி , பித்தல சந்தி மற்றும் தர்மபால மாவத்தை லிப்டன் சுற்றுவட்டம் ஊடாக செல்ல முடியும். 177 இலக்க பேரூந்துகள் மற்றும் கடுவலையிலிருந்து கொள்ளுபிட்டி நோக்கிச் செல்லும் பேருந்துகள் தர்மபால மாவத்தை , வோட் ஒழுங்கை , கிங்சி வீதி , ஹோடன் சந்தி , டீ.எஸ். சேனாநாயக்கசந்தி வரையான வீதியை பயன்படுத்த முடியும்.

கொழும்புக்குள் பிரவேசிப்பதற்கான மாற்று வழிகள்

காலி வீதி ஊடாக கொள்ளுபிட்டி சந்திக்கு வந்து , லிபர்டி சுற்றுவட்டம் , தர்மபால மாவத்தை , பிந்தல சந்தி , செஞ்சிலுவை சந்தி , லிப்டன் சு ற்றுவட்டம் ஊடாக யூனியன் ஒழுங்கைக்கு பிரவேசித்து , வோட்ஒழுங்கை மற்றும் டின்ஸ் வீதிக்கு உட்பிரவேசிக்க முடியும். ஹேவ்லொக் வீதியிலிருந்து தும்முல்ல பகுதியூடாக பிரவேசித்து தேர்ஷ்டன் வீதி , பூங்கா வீதி சந்தி, பித்தல சந்தியிலிருந்து ஜேமிஸ் பீரிஸ் மாவத்தை மற்றும் தர்மபாலை மாவத்தைக்கு உட்பிரவேசிக்க முடியும்.

ஹோர்டன் ஒழுங்கை ஊடாக பிரவேசிக்கும் வாகனங்கள் ஹோர்டன் ஒழுங்கை ஊடாக விஜேராம சந்தியிலிருந்து தென்பகுதியை நோக்கி பிரவேசித்து வோட் ஒழுங்கை ,சொய்சா சுற்றுவட்டம் ஊடாக தர்மபால மாவத்தை , யூனியன் ஒழுங்கை மற்றும் டின்ஸ் வீதிக்கு பிரவேசிக்க முடியும். தும்முல்ல நோக்கி பயணிப்பதற்காக பௌத்தாலோக்க மாவத்தை வீதியையும் பயன்படுத்த முடியும்.

கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கான மாற்று வழிகள்

தர்மபால மாவத்தை , யூனியன் ஒழுங்கை அல்லது டீன்ஸ் வீதி ஊடாக சொய்சா சுற்றுவட்டத்திற்கு பிரவேசிக்கும் வாகனங்கள் பொரளை நோக்கிச் செல்வதற்காக வோட் ஒழுங்கையை பயன்படுத்த முடியும். வோட் ஒழுங்கை விஜேராம சந்தியில் அல்லது கிசங்சி வீதி சந்தியிலிருந்து கினிசி வீதிக்கு உட்பிரவேசித்து ஹோர்டன் ஒழுங்கை ஊடாக பொரளை நோக்கிச் செல்லமுடியும்.

பௌத்தாலோக்க மாவத்தைக்கு உட்பிரவேசிக்கும் வாகனங்கள் கல்லறை சுற்றுவட்டத்தின் ஊடாக வெளியேற முடியும். யூனியன் ஒழுங்கை , டீன்ஸ் வீதி மற்றும் வோட் வீதி ஊடாக சொய்சா சுற்று வட்டத்திற்கு வந்து அவலொக் வீதிக்கு வெளியேறும் வாகனங்கள் தர்மபால மாவத்தை . நூலக சந்தி பூங்கா வீதி , ஜே.ஓ.சீ சந்தி , அராஜகிரி மாவத்தை , பிலிப் குணவர்தன மாவத்தை தும்முல்ல சுற்றுவட்டத்தின் ஊடாக வெளியேற முடியும்.

யூனியன் ஒழுங்கை டீன்ஸ் வீதி  மற்றும் வோட் வீதி ஊடாக சொய்சா சுற்று வட்டத்திற்கு வந்து தர்மபால மாவத்தை ஊடாக காலி வீதிக்கு வெளியேறும் வாகனங்கள் நூலக சந்தி, பூங்கா ஒழுங்கை , ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிபட்டி சுற்றுவட்டம் , டுப்லிகேசன்ட் வீதி ஊடாக வெளியேற முடியும்.