போதைப்பொருள் பிரச்சினை எமது பிராந்திய இளைஞர்களை பெரிதும் பாதித்துவருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு பிராந்திய ரீதியான கூட்டுறவு மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். 

அடுத்து நடைபெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசிய அமைப்பின் (SAARC) உச்சிமாநாட்டின்போது இவ்வாறானதொரு கூட்டுறவைக் கட்டியெழுப்புவதற்கு தாம் அழைப்புவிடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்சல் சொஹைல் அமான் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை பாதுகாப்புப்படை அதிகாரிகளின் பயிற்றுவிப்பு நடவடிக்கைகளுக்காக பாக்கிஸ்தான் வழங்கிவரும் தொடர்ச்சியான உதவிகளுக்கு நன்றிதெரிவிப்பதுடன் சர்வதேச மன்றங்களில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவு வழங்கிவருவதற்கும் நன்றி.

கடந்த 07ஆம் திகதி பலுக்கிஸ்தான் மாகாண தலைநகரான கெட்டாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் காரணமாக உயிரிழந்த  55க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப்பின் வாழ்த்துக்களை தெரிவித்த எயார் மார்சல் அமான், பாகிஸ்தானும் இலங்கையும் பாதுகாப்புத்துறை கூட்டுறவில் ஒரு சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்தோ - பாக்கிஸ்தான் எல்லையில் அண்மைய பதற்ற நிலைமைக்கு வழிவகுத்த நிலைமைகள் குறித்தும் அவர் ஜனாதிபதிக்கு விளக்கினார்.

விமானப்படைத் தளபதி ககன புலத்சிங்கள மற்றும் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் செய்யத் சகில் உசைன் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.