பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்த போராட்டம் நியாயமானதாகும்.

மலையக மக்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் உறுதியாக நின்று இந்த போராட்டத்தில் பங்குபற்றி அதில் வெற்றியடைய வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 5 வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இது பெருந்தோட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சட்ட பூர்வமாக இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கமும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் , முதலாளிமார் சம்மேளனம் அதனை ஏற்றுக் கொள்ள நிலையே காணப்படுகிறது. எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டம் நியாயமானதாகும்.

மலையக மக்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து உறுதியாக இந்த போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரிடமும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாகவும் இலங்கை தேசிய தோட்ட தொழிற்சங்கம் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.