மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு இடங்களில்  இடம்பெற்ற சம்பவங்களில் இரு மீனவர்கள் கடலிலும் குளத்திலும் மூழ்கிப் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் - புன்னைக்குடா கடலில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் கடலில் வீசிய சூறைக்காற்றில் சிக்குண்டு ஒருவர் பலியாகியுள்ளார். தளவாய் கிராமத்தில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தந்தையான பொன்னையா கனகரெத்தினம் (வயது 54) என்பவரே பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மற்றொரு மீனவரான சீதேவிப்பிள்ளை கணேசன் என்பவர் கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் வழமைபோன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் கடலில் மீன் பிடிக்காகச் சென்றுள்ளனர். இவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரவு 11 மணியளவில் திடீரென வீசிய சூறைக்காற்றினால் படகு கவிழ்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை காலையில் சடலமும் படகும் களுவன்கேணி துருப்புக்கேணி என்ற இடத்தில் கரை ஒதுங்கியிருந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில்  ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய புத்தம்புரி குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை 03.02.2021 மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடுமேய்க்கும் தொழிலாளியான பூபாலப்பிள்ளை புவனேந்திரன் (வயது 38) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் வீரபத்திரன் கோயில் வீதியை அண்டி வசிக்கும் புவனேந்திரன் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக தோணியில் சென்றபோது தோணியில் இருந்து தவறி வீழ்ந்து குளத்தில் மூழ்கியுள்ளார். இதையடுத்து தேடுதலை மேற்கொண்டபொழுது சடலம் இன்று புதன்கிழமை புத்தம்புரி குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.