மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அடம்பன் பகுதியில் இன்று புதன்கிழமை(3) காலை 11.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார சேவை உதவியாளராக கடமையாற்றும் அடம்பன் பகுதியைச் சேர்ந்த ரி.எம்.சல்மான் (வயது-29) என்பவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து அடம்பன் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் கடமை முடித்து வீடு நோக்கி செல்லும் போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

உயிலங்குளம் பள்ளமடு பிரதான வீதியூடாக வந்த கனரக வாகனமும், அடம்பனில் இருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மேதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதோடு, குறித்த வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.