கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 வெளியீட்டு திகதியை தேசிய விடுமுறையாக அறிவிக்குமாறு கோரி யாஷின் ரசிகர் ஒருவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

'கே.ஜி.எஃப்' திரைப்படத்தை தொடர்ந்து 'கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந் நிலையில் ராக்கிங் ஸ்டைல்ஸ் என்ற பயனர்பெயருடன் ஒரு டுவிட்டர் பயனர், கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 வெளியீடு (ஜூலை 16) திகதிய‍ை தேசிய விடுமுறையாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி அதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

"யாஷின் கே.ஜி.எஃ.ப் அத்தியாயம் 2 16/07/2021 அன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். மக்கள் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

எனவே 16/07/2021 அன்று தேசிய விடுமுறையை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் உணர்வைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இது ஒரு படம் மட்டுமல்ல, அது எங்கள் உணர்ச்சியும் தான். " என்று அவர் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. 

ஜனவரி 29 ஆம் திகதி திரைப்பட தயாரிப்பாளர்கள் பட வெளியீட்டு திகதியை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.