(செ.தேன்மொழி)
ஹங்வெல்ல பகுதியில் வெளிநாட்டிக்கு  தப்பிச் சென்றுள்ள போதைப் பொருள் கடத்தல்காரரான 'லலியா' என்பவருக்கு உதவியாளராக செயற்பட்டுள்ளதாக கூறப்படும் , யுவதியொருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஹங்வெல்ல பொலிஸாரால், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபரான 22 வயதுடைய  யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து 55 கிராம் ஹெரோயின் , 35 கிராம் ஐஸ் மற்றும் 5 கிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டர் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபரான யுவதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாட்டுக்குச் தப்பிச் சென்றுள்ள போதைப் பொருள் கடத்தல் காரரான 'லலியா' என்ற நபரின் உதவியாளராகவும் இந்த யுவதி செயற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இதுத்தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.