வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று(03.02.2021)தொடக்கம் வரும் 6ஆம் திகதிவரை இடம்பெறும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சமூகம் முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றது.

இதுதொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகள், வடக்கு – கிழக்கை மையப்படுத்தி இடம்பெறுகின்ற நில-வள ஆக்கிரமிப்புக்கள், அடக்குமுறைகள், நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் வகையிலான மத அடையாளங்கள் மற்றும் வரலாற்று இடங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடனான மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரை உள்ளிட்ட பிரச்சினைகள், முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அடக்குமுறைகள், மலையக மக்களுக்கான நாளாந்த வாழ்வாதாரத்திற்கான 1000/= சம்பள உயர்வு எனப் பலதரப்பட்ட பிரச்சனைகளை நாம் நாளாந்தம் எதிர்கொண்டு வாழ்கின்றோம்.

நீண்ட காலமாக உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ்பேசும் மக்களாகிய நாம் பல்தரப்பட்ட பிரச்சனைகளையும் எமக்கெதிரான அடக்குமுறைகளையும் இந்நாட்டில் வாழ்கின்ற சகல சமூகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு சர்வதேசத்திற்கும் எடுத்துச் சொல்லும் முகமாக அகிம்சை வழியிலான இப்போராட்டத்திற்கு இன மத பேதங்களற்று அனைத்துத் தரப்புகளும்கொரோனா நோய்த் தொற்றினைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இப்போராட்டத்திற்கான ஆதரவை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாகிய நாம் வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று 03.02.2021தொடக்கம் 06.02.2021 வரை இடம்பெறவுள்ள பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான தொடர் போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் தமது முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றனர்.

நாம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக போராடி வருகின்றோம். தமிழராகிய நாம் இலங்கை தீவின் வடகிழக்கை ஒருங்கிணைந்த நிலப்பரப்பை தாயகமாக கொண்ட ஓர் தேசிய இனம். எங்கள் தலைவிதியை தீர்மனிக்கும் சகல உரிமையும் எமக்கு உள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாகவும், எமது இனத்தின் மீது தொடர்ச்சியாக அரசின் தொடர் அடக்குமுறைக்கும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிராகவும் நாம் கிளர்ந்தெழ வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு எல்லோருக்கும் உண்டு.  

எமது அரசியல் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை தொடர்ச்சியாக மறுதலித்து வரும் இலங்கை அரசானது இப்போராட்டத்தினை தடை செய்யும் நோக்குடன் நீதிமன்றங்களினுடாக தடை உத்தரவினை வழங்கி எமது அடிப்படை உரிமையினை நசுக்க முயல்கின்றது. இதனை தகர்த்தெறியும் விதமாக அனைவரும் அணியணியாக திரண்டு வந்து இப்போராட்டத்திற்கு வலுசேர்க்குமாறு தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

குறிப்பு: தற்போதைய கொரோனா நோய்த் தொற்றினைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் – என்றுள்ளது