இந்தியாவுடன் சுமுகமான தீர்வை காண்போம் - அரசாங்கம்

By T Yuwaraj

03 Feb, 2021 | 05:28 AM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களை இரு நாடுகளும் இராஜதந்திர ரீதியில் அணுகி சுமூகமான தீர்வு எட்டப்படும்.

ஏற்கனவே இந்த விடயம் இரு நாடுகளுக்குமிடையிலான உணர்வு பூர்வமானதொன்றாக மாறியுள்ளது. எனவே நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கை மற்றும் இந்தியா கிழக்கு முனைய அபிவிருத்தி திட்டத்தில் சுமூகமான தீர்வை எட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தை நிபுணர் குழுவே தீர்மானிக்கும் -  ஆளும் கட்சி உறுதி | Virakesari.lk

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி ஏற்கனவே திட்டமிட்டுள்ளவாறு இந்தியா , ஜப்பான் கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இணையவழியூடாக நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இணை பேச்சாளர்களான அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் மேற்கண்டவாறு கூறினர்.

தொடர்ந்தும் அவர்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

அமைச்சர் கெஹெலிய,

கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழு மற்றும் அபிவிருத்தி குழு என்பன நியமிக்கப்பட்டன.

இந்த குழுக்களால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. கிழக்கு முனையத்தின் நிர்வாக அதிகாரம் நூறு வீதம் துறைமுக அதிகாரசபையிடமே காணப்பட வேண்டும் என்பது அந்த பரிந்துரைகளில் பிரதானமானதாகும்.

அதே வேளை மேற்கு முனையத்தின் பிரதான பகுதிகள் அரசாங்கத்தின் வசம் இருக்கும் அதே நேரம் , எஞ்சியுள்ள பகுதிகளை தேவையேற்படின் அல்லது முதலீட்டாளர்கள் முன்வருவார்களாயில் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்க முடியும் என்பது இரண்டாவது பரிந்துரையாகக் காணப்பட்டது. இதுவே அரசாங்கத்தின் இறுதி தீர்மானமுமாகும்.

அமைச்சர் கம்மன்பில

கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும் யோசனை தற்போதைய அரசாங்கத்தினுடையதல்ல. இது கடந்த அரசாங்கத்தின் செயற்பாடாகும். 2017 ஏப்ரல் 25 ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அப்போதைய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரால் இலங்கையில் 17 இந்திய அபிவிருத்தி திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அந்த அபிவிருத்தி திட்டங்களில் கொழும்பு துறைமுகத்தின் ஏதேனுமொரு முனையத்தை இந்தியா அபிவிருத்தி செய்தல் , மத்தள விமான நிலையம், மின்னுற்பத்தி நிலையம், திருகோணமலை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட 17 அபிவிருத்திகள் உள்ளடங்குகின்றன. இதன் தொடர்ச்சியாக 2018 மே 28 ஆம் திகதி அப்போதைய துறைமுக அலுவல்கள் அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் மேற்கூறப்பட்ட முனையங்களில் கிழக்கு முனையமே அபிவிருத்தி செய்யப்படும் என்றும் , அதனை இந்தியா , ஜப்பான் மற்றும் இலங்கையின் கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டு 49ஃ51 சூத்திரத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

எனினும் தற்போது நாட்டின் நலன் கருதி கிழக்கு முனையத்தின் நூறு வீத உரிமத்தையும் துறைமுக அதிகாரசபை வசமே வைத்திருக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு முனையத்தைப் போன்று சிறப்பிடம் அல்லது முக்கியத்துவம் மேற்கு முனையத்திற்கு கிடையாது. எனவே ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் கூறப்பட்டுள்ளதைப் போன்று ஜப்பான் , இந்தியா என வெளிநாட்டு முதலீடுகளுடன் அதனை அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரமேஷ் பத்திரண

கேள்வி : 2019 இல் செய்து கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கை செயற்பட வேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்வது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதா?

பதில் : ஒப்பந்தத்தை இரத்து செய்வது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. முதலீடுகள் , தேசிய சொத்துக்களை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்தல் மற்றும் பொருளாதார காரணிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக் கொண்டே கிழக்கு முனையம் குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பூகோள அரசியல் உள்ளிட்ட பல விடயங்களில் இந்திய மிக முக்கியத்துவமுடையதும் நட்புறவானதுமான நாடாகும். எவ்வாறிருப்பினும் நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை மற்றும் கிழக்கு முனையத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்துபடுத்த வேண்டிய தேவை உள்ளது. நாட்டின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்தே ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயற்படுகின்றோம்.

அமைச்சர் கெஹெலிய

கேள்வி : கிழக்கு முனையம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில் : அரசாங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைச்சரவை தீர்மானங்களை எடுத்துள்ளது. அதற்கமைய கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் துறைமுக அதிகாரசபைக்குரித்தாகும். தற்போது இந்த தீர்மானம் மாத்திரமே எடுக்கப்பட்டுள்ளது.

பதில் : (அமைச்சர் கம்மன்பில ) துறைமுக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் கிழக்கு முனையமானது மூன்று கட்டடங்களாக மூன்று வருடங்களில் அபிவிருத்தி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கேள்வி : இது குறித்து ஏனைய இரு தரப்புக்களுக்கு எவ்வாறு அறிவிக்கப்படும் ? அல்லது இந்த திட்டத்திலிருந்து குறித்த இரு தரப்புக்களும் எவ்வாறு விலக்கப்படும் ?

பதில் : துறைமுக அதிகாரசபை, துறைமுக அமைச்சு மற்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கும்.

அமைச்சர் கம்மன்பில

கேள்வி : கிழக்கு முனைய அபிவிருத்திக்கு 700 மில்லியன் டொலர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையை பெற்றுக் கொள்ள அரசாங்கத்திடமுள்ள திட்டம் என்ன?

பதில் : துறைமுக அதிகாரசபை அதன் சொந்த நிதியை இதற்காக செலவிடுவார்கள். அத்தோடு உள்நாட்டு வணிக வங்கிகளிடமிருந்தும் நிதி பெற்றுக் கொள்ளப்படும்.

கேள்வி : மேற்கு முனையம் குறித்து இதற்கு முன்னர் டில்லியுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா?

பதில் : இது மிகவும் சிக்கலாக இராஜதந்திர சிக்கலாகும். எனினும் இலங்கை அரசாங்கமானது இந்திய அரசாங்கத்துடன் எந்த சந்தர்ப்பத்திலும் நட்புறவை பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். இது குறித்து இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த பின்னர் நிலைப்பாடுகளை அறிவிக்கும். தற்போது அதுபற்றி எதனையும் கூற முடியாது.

அமைச்சர் கெஹெலிய

கேள்வி : ஜனவரி 13 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளதா?

பதில் : ஜனாதிபதியே அமைச்சரவையின் பிரதானியாவார். நாம் அவரது தீர்மானத்தை புறக்கணிக்கவில்லை. அவராலேயே கிழக்கு முனையம் குறித்து ஆராய்வதற்கான இரு குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்த குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் கம்மன்பில

கேள்வி : மேற்கு முனைய அபிவிருத்தி இந்தியா , ஜப்பான் நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்திற்கமைய முன்னெடுக்கப்படுமா? அல்லது அதானி நிறுவனத்திற்கு வழங்கப்படுமா?

பதில் : மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளால் பெயர் குறிப்பிடப்படும் நிறுவனங்களுடன் கூட்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே குறித்த நிறுவனங்கள் எவை என்பது தொடர்பில் அந்த நாடுகளே தீர்மானிக்கும்.

கேள்வி : மேற்கு முனையம் அபிவிருத்தியின் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கும் இலங்கைக்கும் வழங்கப்படும் உரிமங்கள் அளவு குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதா?

பதில் : இதற்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தின் முனையங்கள் அபிவிருத்தியின் போது பின்பற்றப்பட்ட நிபந்தனைகளே தொடர்ந்தும் பின்பற்றப்படும். அதற்கமைய முதலீடுகள் மற்றும் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு 85 வீத உரிமமும் , துறைமுக அதிகார சபைக்கு 15 வீதமும் என்ற நிபந்தனை அடிப்படையில் 35 வருடங்களுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

கடந்த அரசாங்கத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டாலும் அதனை இந்தியா - ஜப்பான் - ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகக் கருத முடியாது. இலங்கை அரசாங்கமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. எனவே ஒப்பந்தத்திலிருந்து விலகுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு கால அவகாசம் தேவை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right