(எம்.மனோசித்ரா)

யாழ் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் காணி அற்ற குடும்பங்களுக்கு காணியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய யாழ் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் 381 குடும்பங்களுக்கு பிரதம விலை மதிப்பாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் 700,000 ரூபாய் செலவில் 20 பேர்ச்சஸ் காணியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணிகள் இல்லையென்பது அடையாளங் காணப்பட்டுள்ளது.

தங்களது பிறப்பிடத்திற்கு அண்மையில் காணிகளை வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும் அப்பிரதேசங்களில் தற்போதுள்ள காணிகளின் பெறுமதிக்கமைய 700,000 ரூபாவிற்கு 20 பேர்ச்சஸ் காணியை பெறுவதற்கு சிரமம் எனத் தெரியவந்துள்ளது.

எனவே குறித்த தொகைக்கு அதிகரிக்காமல் அரச விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் பிரகாரம், 10 - 20 பேர்ச்சஸ் காணியை தனியார் உரிமையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து வழங்குவதற்கும், தொடர்ந்து வீடுகளை நிர்மாணிப்பதற்கான பொறிமுறையை தயாரித்து இடம்பெயர்ந்த குடும்பங்களை துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.