(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட்-19 தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாளொன்றுக்கு 700 - 800 தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலையில் இன்று இலங்கையில் முதன் முறையாக கொவிட் தொற்றால் வைத்தியரொருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் ஒருவரே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

ராகம போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 32 வயதான கயான் தன்த்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு தொற்றினால் உயிரிழந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் ஆவார்.

இந்நிலையில் இன்றைய தினம் முன்னாள் சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொகு பண்டாவிற்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை 361 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 65 344 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 59 043 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 5978 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திங்களன்று பதிவான மரணங்கள்

நேற்று திங்கட்கிழமை நாட்டில் மேலும் 8 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மரணங்களின் எண்ணிக்கை 323 ஆக உயர்வடைந்துள்ளது.

வத்தளையை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கொவிட் நிமோனியா , சிறுநீரக பாதிப்பு என்பவற்றால் ஜனவரி 31 ஆம் திகதி முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

நுகேகொடையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆணொருவர் கொவிட் நிமோனியா  மற்றும் புற்று நோயால் ஹோமாகம ஆதார வைத்தியாலையில் பெப்ரவரி முதலாம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 2 ஐ சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவர் கொவிட் நிமோனியா, நுரையீரல் தொற்று , இதய நோய் என்பவற்றின் காரணமாக ஜனவரி 31 ஆம் திகதி ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆணொருவர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட இதய நோய் நிலைமை மரணத்திற்கான காரணமாகும்.

பொலன்னறுவையை சேர்ந்த 39 வயதுடைய ஆணொருவர் கொவிட் தொற்றுடள் இரத்தம் நஞ்சானமையால் ஜனவரி 30 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

மடவல பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர் கொவிட் நிமோனியாவுடன் இதயம் செயழிலந்தமையால் நேற்று முன்தினம் தெல்தெனி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆணொருவர் கொவிட் நிமோனியாவுடன் இரத்தம் நஞ்சானமை , நீரிழிவு நோய் தீவிரமடைந்தமை என்பவற்றால் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.