(எம்.மனோசித்ரா)

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏனைய வருடங்களைப் போலவே இம்முறையும் கொண்டாடப்படும்.

எனினும் இந்த ஆண்டு கொவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் சுகாதார ஆலோசனை வழிகாட்டல்களுக்கு அமைய பாதுகாப்பான முறையில் கம்பீரம் குறையாதவாறு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்று அரச பாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது. இதன் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமையைப் போன்று அதன் கம்பீரம் குறையாமல் நடைபெறும். எனினும் இம்முறை கொவிட் அச்சுறுத்தல் காணப்படுவதால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கமைய மட்டுப்பாடுகளுடன் அவை இடம்பெறும்.

நாளை  முதல் மத வழிபாடுகள் ஆரம்பமாகும். சுதந்திர சதுக்கத்தில் மத வழிபாடுகள் ஆரம்பமாகும். அத்தோடு வழமையைப் போன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வருகையை அடுத்து முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு மற்றும் கலாசார பேரணி என்பனவும் நடைபெறும்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சகல மாவட்ட செயலகங்கள் , பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் மர நடுகை செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்வரி 1 முதல் 7 வரை சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் , வீடுகள் உள்ளிட்டவற்றில் தேசிய கொடியை பறக்கவிடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.