“a Better Connected Sri Lanka” என்ற தொனிப்பொருளில் முதல்முறையாக நாட்டில் இடம்பெறுகின்ற இலங்கை தேசிய புரோட்பான்ட் ஒன்றுகூடல் நிகழ்வு, தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு, தொலைத்தொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு ஆகியனவற்றால் இணைந்து நடாத்தப்பட்டு, Huawei இன் இணை ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. 

ஒரு தொழிற்துறை சார்ந்த கலந்துரையாடல் களமாக இந்த ஒன்றுகூடல் நிகழ்வு அமைந்துள்ளதுடன் அரசாங்கத்தின் சிரேஷ்ட கொள்கை வகுப்பாளர்கள், உள்நாட்டு தொழிற்பாட்டாளர்கள், சேவை வழங்கல் தொழிற்பாட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்துறையினர் என அனைத்து தரப்பினரையும் ஒன்றுதிரட்டி, இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கிய பாகமாகக் காணப்படுகின்ற புரோட்பான்ட் தொழில்நுட்பத்தை விஸ்தரிப்பதற்கு அனுசரணையளிக்கும் வேலைத்திட்டமொன்றை தமக்கிடையில் பகிர்ந்துகொண்டனர்.

இந்த அரை நாள் நிகழ்வில், தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு, இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் சர்வதேச அளவில் முன்னிலை வகித்துவருகின்ற Huawei, Ovum, iFlix மற்றும் உள்நாட்டிலுள்ள பிரதான தொலைதொடர்பாடல் தொழிற்பாட்டு நிறுவனங்களிலிருந்து பிரபலமான பேச்சாளர்கள் கலந்துகொண்டனர்.

தொலைதொடர்பாடல்கள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சரான ஹரீன் பெர்னாண்டோ, டிஜிட்டல்ரீதியாக இணைப்புத்திறன் கொண்ட இலங்கையை உருவாக்கும் வேலைத்திட்டத்தை முன்வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒன்றுகூடலில் பங்குபற்றும் அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்துறை சிரேஷ்ட அதிகாரிகளை வரவேற்றார். .

“அண்மைய ஆண்டுகளில் நாட்டின் தொலைதொடர்பாடல் தொழிற்துறை பாரியளவில் மேம்பாடு அடைந்துள்ளது. சர்வதேச புரோட்பான்ட் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சிகளின் காரணமாக உலகளாவில் துரித அபிவிருத்தி கொண்ட புதிய யுகம் ஒன்று உதித்துள்ள நிலையில், இலங்கையில் புரோட்பான்ட் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்கு காலம் கனிந்துள்ளது என நாம் உறுதியாக நம்புகின்றோம்.”

Huawei Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான  வாங்ஷன்லி தமது நிறுவனம் நாட்டின் தொலைதொடர்பாடல் துறைக்கு தற்போது வழங்கிவருகின்ற ஆதரவையும் இலங்கையில் தமது தொழிற்பாடுகளின் 10 ஆண்டுகள் பூர்த்தியையும் சுட்டிக்காட்டினார். 

“2005 ஆம் ஆண்டில் Huawei நிறுவனம் இலங்கையில் தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. 10 ஆண்டுகால அடிப்படையில் மொபைல் மற்றும் நிலையான புரோட்பான்ட் இணைப்பு துறைகளில் முறையே 17.3% மற்றும் 44.4% என்ற வருடாந்த கூட்டு வளர்ச்சி வீதத்துடன் தெற்காசியாவில் மிக விரைவாக வளர்ச்சியடையும் சந்தையாக மாற வேண்டும் என்ற இலக்கினை அடைந்துகொள்வதற்கு உள்நாட்டு தொழிற்பாட்டாளர்களுடன் நாம் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றோம். 

இன்று 15 மில்லியன் இலங்கை மக்களுக்கு எமது சேவைகளை வழங்கி வருகின்றோம்.” “இந்த மகத்தான ஒன்றுகூடல் களத்தில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், புரோட்பான்ட் துறையில் அர்த்தமுள்ள கலந்துரையாடலுக்கு அனுசரணையளிக்கும் இந்த ஒன்றுகூடல் வெற்றிகரமாக இடம்பெறுகின்றமை எமக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றது. டிஜிட்டல் இணைப்புத்திறன் கொண்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் இலக்கு ஒரு வலிமைமிக்க பொறுப்பாக அமைந்துள்ள நிலையில் தொழிற்துறை சிரேஷ்ட அதிகாரிகளின் காத்திரமான பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் தனது தலைமையில் முன்னெடுக்கும் முயற்சிகளை நாம் போற்றுகின்றோம். 

சர்வதேச அளவில் தகவல் தொலைதொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகித்துவருகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில் ஒன்றிணைந்த கட்டுமான சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு எமது அறிவு தீர்வுகள் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதில் Huawei பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. உள்நாட்டில் திறமைகளை விருத்தி செய்தல் போன்ற செயற்பாடுகள் மூலமாக இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையிலான பங்களிப்பை வழங்கும் அர்ப்பணிப்புடன் நாம் உள்ளோம்” என்று ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் வாங் குறிப்பிட்டார்.

டிஜிட்டல்ரீதியாக திறன்கொண்ட வலுவூட்டப்பட்ட சமூகத்தைத் தோற்றுவிக்கும் மாற்றத்திற்கான பயணத்தில் இலங்கை தற்போது காலடியெடுத்து வைத்துள்ள நிலையில் இதைக் கட்டியெழுப்புவதற்கு வலுவான நிலையான-புரோட்பான்ட் தளத்தைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. 

தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் பரந்த அளவில் ஒப்பிடுகையில் இலங்கையில் நிலையான-புரோட்பான்ட் அடைவு மட்டம் ஒப்பீட்டளவில் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட 10 நாடுகள் மத்தியில் 5 ஆவது ஸ்தானத்தில் அது திகழ்வதாகவும் Ovumமேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.  DSL  மற்றும் FTTH  அடைவு மட்டங்கள் உயர்ந்த வீதத்தில் காணப்படுகின்ற மலேசியாரூபவ் தாய்லாந்து மற்றும் வியட்னாம் போன்ற முன்னணி சந்தைகளுக்கு இணையாக முன்னேறுவதை நோக்கி இலங்கை பயணித்து வருகின்றது. குடும்பங்கள் மத்தியில் நிலையான-புரோட்பான்ட் அடைவு மட்டம் தொடர்ந்தும் குறைவாக உள்ளதுடன் 2015 ஆம் ஆண்டின் முடிவில் இது 10.3% ஆகக் காணப்பட்டது. குறைந்த அளவிலான குடும்பங்களை உள்ளடக்கிய அடைவுமட்டம் மற்றும் உறுதியான FTTH சந்தையின்மை ஆகியன நாட்டில் சராசரி பதிவிறக்க கதி தாழ்ந்த மட்டத்தில் காணப்படுவதுடன் தொடர்புபட்டுள்ளன.    

இந்நிகழ்வில் இலங்கை மக்கள் மத்தியில் டிஜிட்டல்ரீதியாக இணைப்புத்திறனை மேம்படுத்துதல் மற்றும் நிலையான புரோட்பான்ட் மற்றும் உள்ளடக்க சேவைகளை மேம்படுத்துதல் தொடர்பான முயற்சிகள் தொடர்பில் விரிவான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. 

புரோட்பான்ட் மேம்பாட்டு மூலோபாயங்களை துரிதமாக விநியோகிப்பதை நோக்கிய முயற்சிகளை அமுலாக்கம் செய்தல் சிறந்த ஒழுக்காற்று கொள்கைகளை ஊக்குவித்தல் மற்றும் நாட்டில் புரோட்பான்ட் துறையில் அமைச்சுக்களுக்கு இடையிலான மற்றும் தொழிற்துறையுடனான ஒருங்கிணைந்த முயற்சிகளை கணிசமாக அதிகரித்தல் ஆகியவற்றிற்கு தொழிற்துறை செயற்பாட்டாளர்கள் வல்லுனர்கள் மற்றும் அரசாங்க அமைப்புக்கள் முன்வரவேண்டுமென்று இந்த அங்குரார்ப்பண இலங்கை புரோட்பான்ட் ஒன்றுகூடலில் அழைப்பு விடுக்கப்பட்டதுடன் இவை அனைத்தும் நிகழ்வில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.