நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை கடற்படையினர் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த வைரக்கண்ணு மகன் கணேஷ்குமார் (30), பிச்சைபாண்டி (46), முகமதுகான் (48) மற்றும் ஒருவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவார். 

இந்நிலையில் குறித்த மீனவர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன்  துறைமுக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே 4 மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.