(செ.தேன்மொழி)
ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனைவரையும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் கூறியதாவது,

தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் தொடர்பான கோரிக்கை அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், அமரர் ஆறுமுகன் தொண்டமானும் இதுத் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.  அதற்கமைய, அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. அதேபோன்று ஜனாதிபதி, பிரதமர் மட்டுமன்றி பெருந்தோட்டத்துறை அமைச்சர்களும் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் குறித்து கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அவை வெற்றியடையவில்லை.

அதற்கமைய, எதிர்வரும் ஆறாம் திகதி சம்பளம் தொடர்பான பேச்சுவாரத்தை இருப்பதால், ஐந்தாம் திகதி அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுமாறு அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில் எம்மால் பாரிய ஆர்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. அதன் காரணமாகவே அன்றையதினம் அனைவரையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.