சுதந்திர சுவாசம் அமைக்க சரித்திர நாயகியே துணையென வா

01 Feb, 2021 | 05:14 PM
image

(வட இலங்கை  முழுவதும் புதுமை மாதாவின் அடைக்கலத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு நானூறாவது வருடம்)

எகிப்து நாட்டில் இருந்து இஸ்ரேல் மக்கள் வெளியேறிய சமயத்தில் கடவுளுடைய தூதன் மோசஸ்ஸின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவர்களுடைய  தலைச்சன் பிள்ளைகளை கொல்லாது விட்டான். 

இந்த நிகழ்வை நினைவுகூர்ந்தும் கடவுளின் இச்செயலுக்கு நன்றி தெரிவித்தும் இஸ்ரேல் மக்கள் தங்களுக்கு பிறக்கும் முதல் ஆண்குழந்தையை கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புகொடுக்கவேண்டும் என்பது மோசேயின் சட்டம் ஆகும். இதன் அடித்தளம்  இறைவனை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நிகழ்வு ஆகும்.

இயேசுவை கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சி லூக்கா நற்செய்தியில் காணப்படுகிறது. இதில் அவர் இயேசுவின் அர்ப்பணம் பற்றி கூற முற்படுகிறார்.

அத்தோடு இயேசு ஆலயத்துக்கு கொண்டுவரப்படும் நிகழ்வினை எதிர்பார்த்து வாழ்வின் நிறைவினை காட்ட முற்படுகிறார். அதாவது சிமியோன் மற்றும் அன்னையின் எதிர்பார்ப்பு அவர்களின் தனிப்பட்ட எதிர்பார்ப்பு அல்ல. இது உலகனைத்தினதும் எதிர்பார்ப்பு ஆகும். இந்த எதிர்பார்ப்பு இந்த நிகழ்வோடு முற்றுப்பெறுவதை காட்டும் தன்மையை ஆசிரியர் வெளிப்படுத்துவதை காணமுடிகிறது.

'காணிக்கை' என்பது கிறிஸ்தவத்தை பொறுத்தவரை இன்றியமையாத ஒரு சொல் ஆகும். காயின் ஆபேல் தொடங்கி கிறிஸ்து வரை இச்சொல்லானது நீண்டிருப்பதை பார்க்கக் கூடியதாய் இருந்துள்ளது. வேதாகமத்தின் படி இறைமகன் கிறிஸ்து இரண்டு முறைகள் காணிக்கையாகுகிறார்.  ஒன்று ஆலயத்தில் காணிக்கை ஆகுவது. இரண்டாவது கல்வாரி மலையில் காணிக்கை ஆகுவது. 

முதலாவதாக குறிப்பிடப்படும் காணிக்கை ஆதல் என்பது கிறிஸ்துவின் மனித அவதார நோக்கின் ஆரம்பமாக பார்க்க கூடியதாக உள்ளது. அத்தோடு தானே பலிப்பொருளாய் கடவுளுக்கு காணிக்கை ஆகுவதையும் பார்க்க முடிகிறது. இறைமகன் இயேசு மனிதனின் பாவ நிலையை போக்க மனித அவதாரம் எடுத்தார். இந்த நிகழ்வே மனித பாவம் போக்கும் நிகழ்வாகவும் எல்லோரையும் மீட்பதற்காக இறைவன் தாமே 'எல்லாவற்றிலும் எல்லோரையும் போலாகி' மீட்பின் மறைபொருளை உலகிற்கு வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது.

இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணித்தல் அல்லது அதிகாரப்பூர்வமாக ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா என்பது விவிலியத்தில் குழந்தை இயேசுவை அதன் பெற்றோர் சூசையப்பரும் மரியாளும் எருசலேமில் இருந்த கோவிலில் மோசேயின் சட்டப்படி ஆண்டவருக்கு அர்ப்பணித்த நிகழ்வினைக் குறிக்கும் விழாவாக இருந்தது.

கடவுளாக இருந்த போதிலும் மனித அவதாரத்தை தான் ஏற்றதினால் மனிதர்களுக்கு அக்கால வழக்கப்படி நிகழ்கின்ற அத்தனை சட்டங்களையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதன் முதல் அடையாளமாக இச் சடங்கு காணப்படுகின்றது. ஏனெனில், அக்கால வழக்கப்படி இச் சடங்கானது 'சுத்திகரிப்புச் சடங்காக' நிகழ்ந்திருந்தது. பாவத்துடன் பிறக்கும் மனிதன் இச் சடங்கின் வாயிலாக சுத்திகரிக்கப்பட்டு இறைவனுக்கு உகந்தவனாக்கப்படுகிறான்.

இது பெப்ரவரி 2 அன்று ஆண்டு தோறும் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவின் தொடக்கத்தில் இது கன்னிமரியாவின் தூய்மைச் சடங்கு விழா என்று அழைக்கப்பட்டது.

குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டது. இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நற்செய்தி பகுதியை அடிப்படையாகக் கொண்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா புதிய ஏற்பாட்டில் லூக்கா எழுதிய நற்செய்தி (லூக்கா. 2:23-24) குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு அடுத்த 40 நாட்களில் கொண்டாடப்பட்டது.               

மேற்கத்திய கிறிஸ்தவ திருச்சபைப் பாரம்பரியங்களில் இத்திருவிழா கேன்டில்மஸ் ( Candlemas ) என அழைக்கப்படுகின்றது. இவ்விழா திருப்பலிக்கு முன்பு எரியும் திரிகளோடு பவனியாக ஆலயத்துக்கு மக்கள் வருவர்.

ஆகவே இப்பெயர் வழங்கலாயிற்று. பல கிறிஸ்தவ திருச்சபைகளில் இவ்விழா 40 நாட்கள் கொண்டாடப்படும். கிறிஸ்து பிறப்புக் காலத்தினை நிறைவு பெறச்செய்கின்றது. இங்கிலாந்து திருச்சபையில் ஆங்கிலிக்கன் சமூகத்தினரின் தாய் திருச்சபையில் இவ்விழா முதன்மைத் திருவிழாவாக பெப்ரவரி 2 அல்லது  ஜனவரி 28முதல் பெப்ரவரி 3 வரையான காலப்பகுதிக்கு இடையில் வரும் ஞாயிறன்று கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.

இவ்வாண்டானது வட இலங்கை  (யாழ்ப்பாணப்பட்டணம்) முழுவதும் புதுமை மாதாவின்அடைக்கலத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு நானூறாவது  ஆண்டாகும். சில வரலாறுகள் தொலைக்கப்பட்டும், தொலைக்கடிக்கப்பட்டும் காணப்படுகின்றன.

அவற்றை அடுத்த தலைமுறைக்கு அழிவடையாமலும், பாதுகாப்பாகவும்  கொண்டுபோய் சேர்க்கவேண்டிது எமது மிகப்பெரும் கடமையாகும். யாழ் புதுமை மாதா வரலாற்றை பொறுத்தவரை அது நீண்டதொரு காலப்பகுதியை கொண்டதாகும்.

போத்துக்கீச ர் தமது ஆட்சிக்காலத்தில் எழுத்து வடிவம் பெறும் ஆவணங்களை அவர்கள் பெரிதும் உருவாக்கவில்லை. ஏனெனில் அவர்கள் நாடுகளை கைப்பற்றுவதிலும், வியாபாரத்தை வளப்படுத்துவதிலும், மதத்தை பரப்புதலிலும் கூடிய கவனம் செலுத்தியதாகும்.  பின்னர் ஆட்சியமைத்த ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்றோரும் அவர்களின் மத அடையாளங்களை அழிப்பதில் குறியாக கொண்டதாலும் ஆவணங்கள் காணாமல் போயின. போத்துக்கீசர் அதிகம் அன்னை மரியாளை வணங்கி நின்றார்கள். அத்தோடு அன்னை மரியாளுக்கே அதிக ஆலயங்களையும் அமைத்தார்கள். அதில் முக்கியமானது யாழ் புதுமையன்னை ஆலயமாகும்.   

போத்துக்கீசரின் பல வெற்றிகளுக்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் புதுமை அன்னை துணையாக இருந்தார்.  அவளுடைய புதுமைகள் எண்ணிலடங்காதவையாகவே காணப்பட்டது. இதன் அடையாளமே அவளின் அடைக்கலத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்வு ஆகும்.

 

கோட்டையில் வெற்றி மாதா ஆலயத்தில் புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தை செதுக்க மரம் ஒன்றினை அங்கு பங்கு தந்தையாக இருந்த பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த 'பிரான்சிஸ்கோ டூ சான்ரோ அன்ரரோனியா' என்னும் குருவானவரால் கேரளாவிலுள்ள கொச்சின் நகரத்திலிருந்து கொண்டுவரப்பட்டது எனவும் அன்னையின் திருச்சொரூபத்தின் தேவைக்கருதி அது அன்னையின் திருச்சொரூபம் அமைக்க நாவாந்துறையில் வசித்து வந்த அன்னக்குட்டி என்பவரிடம் வழங்கப்பட்டது.

திருச்சொரூபத்தினை அன்னக்குட்டியும், அன்னக்குட்டியின் இறப்பின் பின் அன்னக்குட்டியின் மகள் அஞ்சியாவும் செதுக்கி வந்தனர். அன்னக்குட்டியின் வீட்டில் திருச்சொரூபம்  அமைக்கும் நேரத்தில் இடம்பெற்ற புதுமைகளால் திருச்சொரூபம் முடிவுறும் முன்னரே 1914ம் ஆண்டு யூலை மாதம் 24ம் திகதி அன்னக்குட்டியின் வீட்டில் இருந்து கோட்டை வெற்றி மாதா ஆலயத்துக்கு கொண்டு சென்றதாகவும்  பின்னர் எண்ணற்ற புதுமைகள் அன்னையால் நிகழ்த்தப்பட்டதாகவும் இப்புதுமைகளால் இங்கு வாழ்ந்த கத்தோலிக்கர்கள் தமது பாதுகாவலியாய் அன்னையை ஏற்றுக்கொண்டு வழிபடத் தொடங்கினார்கள். பின்னர் போர்த்துகீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கோட்டையை கைப்பற்றிய போது அன்னையின் வழிபாடுகள் நிறுத்தப்பட்டு அன்னையின் திருச்சுருபம் கடல் மூலமாக இந்தியாவின் கோவா நகருக்கு அருட்தந்தையர்களால் கொண்டு செல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

(கீ.மேரியன் நித்தியானந்தா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right