(எம்.மனோசித்ரா)

சுதந்திர தினத்தன்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தாமரை கோபுர சுற்று வட்டம், தேசிய நூலக ஆவண காப்பக சுற்று வட்டம் மற்றும் சுதந்திர சதுக்க வீதி என்பவற்றில் எவ்வித போக்குவரத்துக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என்று பொலிஸ் ஊடாக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சுதந்திர தினத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை இணையவழியூடாக இடம்பெற்றது.

இதன்போதே மேற்கண்ட விடயத்தை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரியாதை அணி வகுப்புக்கள் மற்றும் கலாசார பேரணி என்பவற்றின் காரணமாக விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர சதுக்க சுற்று வட்டாரத்தில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டொரிங்டன் , சுதந்திர வீதி மற்றும் சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் காலி வீதி, லோலெவல் வீதி, கண்டி வீதி, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, கோட்டை மற்றும் புறக்கோட்டைக்கு செல்லும் வீதிகள் என்பவற்றில் போக்குவரத்து வழமை போன்று இடம்பெறும்.

 தாமரை கோபுர சுற்று வட்டாரம் , தேசிய நூலக ஆவண காப்பக சுற்று வட்டாரம் மற்றும் சுதந்திர சதுக்க வீதி என்பவற்றில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சுதந்திர தினத்தன்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 வரை எந்த போக்குவரத்தும் இடம்பெற மாட்டாது.

எனவே சாரதிகள் அல்லது சொந்த வாகனங்களில் இந்த வீதிகளில் செல்பவர்கள் மாற்று வழிகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு பொலிஸ் போக்குவரத்து பிரிவின்  011-2433333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிந்து கொள்ள முடியும் என்றார்.