(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நாட்டு அதானி நிறுவனத்துக்கோ, வேறெந்த நாட்டுக்கோ வழஙகாமல் துறைமுக அதிகார சபையினால் தொடர்ந்து நிர்வகிக்கும் நம்பிக்கை காணப்படுகிறது.

எனவே  கிழக்கு முனையம் தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ள விடயங்கள் மிகவும் சாதகமான முறையில் அமையும்.

 

துறைமுக ஊழியர் சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய காரணிகளை கொண்டு துறைமுக சேவையினை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் முயற்சிப்பார்களாயின் அது முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே தொழிற்சங்கத்தினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரால் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

துறைமுன  அதிகார சபையில் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விவகாரம் தற்போதைய அரசியல் மற்றும் சமூக மட்டத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ள தவறான கருத்துக்கள் அனைத்துக்கும் மூல காரணியாகவும் உள்ளன.கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்குவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றது. 

இந்த பிரச்சினை ஆரம்பித்தவுடனேயே அரசாங்கத்தால் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன.எனவே இந்த குழுக்களும் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை  துறைமுக அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதும் அது தொடர்பில் அவர் அறிவிக்கவுள்ளார்.

தற்போது வரை இந்த சூழ்நிலையை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிந்துள்ளது.இன்று  கிழக்கு முனையம் தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ள விடயங்கள் மிகவும் சாதகமான முறையில் அமையும் என துறைமுக அதிகாரசபையின் தலைவர் என்ற ரீதியில் பொறுப்புடன் குறிப்பிட்ட முடியும்.

தற்போதைய நிலைமைக்கு கடந்த அரசாஙகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளாக காரணிகள் பிரதானமாக கொள்ளப்படுகின்ற குறிப்பாக சர்வதேச மற்றும் புரிந்துனர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்த பின்னர் சிற்சில சிக்கல்கள் ஏற்படும் என்றும் அதனைத் தீர்க்க உரிய நடைமுறைகள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதின் தேவையை அடிப்படையாகக் கொண்டு துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரின் அபிப்ராயங்களின் அடிப்படையில் எம்மால் அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே அனைவரினதும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் கிழக்கு முனையம் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்பட வாய்ப்பு கிடைக்கும். இது முழு துறைமுக அதிகாரசபையின் எதிர்ப்பார்ப்பாகும்.கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் 2017ஆம் ஆண்டு முடிக்கப்பட வேண்டிய வேலைத்திட்டமாகும். 

எனினும் அதிகாரசபை இருண்டகால பகுதியாக 2015- 2017ஆம் ஆண்டுகள் காணப்பட்டன.குறித்த காலப்பகுதியில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளும் அங்கு முன்னெடுக்கப்படவில்லை.

இந்த இருண்ட காலத்தின் தாமதம் வர்த்தகத்தில் பாரிய சவால்களை ஏற்படுத்தின.எனவே இது துறைமுகத்துக்கும நாட்டுக்கும் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதால் உடனடியாக கிழக்கு முனையம் தொடர்பான யோசனைக்குச் சென்றோம்.

தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பத்தில் தொழிற்சங்கங்களுக்கு அதிகார சபையின் தலைவர் என்ற ரீதியில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படும்.

எந்தவொரு தரப்பினரும் துறைமுகத்தின் செயற்பாடுகளை பலவீனப்படுத்த முயற்சித்தால் அது துறைமுகத்துக்கு மட்டுமல்ல முழு நாட்டையும் பாதிக்கும் ஒரு காரணியாக அமையும்.பொறுப்புள்ள தொழிற்சங்கங்கள் என்ற ரீதியில் அவர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்