(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ,குத்தகை அடிப்படையில் பிற நாட்டவருக்கு வழங்க வேண்டிய தேவை கிடையாது என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலான அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளார்கள். பிற நாட்டவருக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை கூட இடம்பெறவில்லை. ஆகவே துறைமுக ஊழியர்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம் அநாவசியமானது என பிரமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்காலை - கால்டன் இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எவருக்கும் விற்கவும் மாட்டோம், குத்தiகை அடிப்படையில் வழங்கவும் மாட்டோம்.

என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். எமது கண்காணிப்பின் கீழ் நிர்வகிக்கப்படும் என்பதை தொழிற்சங்கத்தினர் நன்கு அறிவார்கள்.

கிழக்கு முனைய விவகாரத்தை கொண்டு துறைமுக ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுப்பது அநாவசியமானது.பிற நாட்டவர்களுக்கு விற்பது, அல்லது குத்தகை அடிப்படையில் வழங்குவது குறித்து எத்தரப்பினருடன் பேச்சுவார்த்தை கூட முன்னெடுக்கப்படவில்லை என்பதை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தொழிற்சங்கத்தினருக்கு தெளிவாக குறிப்பிட வேண்டும்.

கிழக்கு முனையத்தை விவகாரத்தை குறிப்பிட்டுக் கொண்டு தொழிற்சங்கத்தினர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவையில்லை.

என்னிடம் தெரிவித்தால் நான் உண்மை தன்மையை தெளிவுப்படுத்தியிருப்பேன்.கிழக்கு முனையத்தை விற்க வேண்டிய தேவையில்லைஎன்ற  நிலைப்பாட்டில் அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளார்கள்.

ஜனாதிபதியும் இந்நிலைப்பாட்டில் உள்ளாரே தவிர தனித்த தீர்மானத்தில் இருக்கவில்லை.தேசிய வளங்களை விற்பது எமது கொள்கை கிடையாது அது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை.ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டு மக்கள் எமக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கவில்லை.

ஆகவே  கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிற நாட்டவருக்கு விற்கமாட்டோம் என்பதில் உறுதியாகவுள்ளோம் என்றார்.

கொழும்பு துறைமுக ஊழியர்கள் கடந்த 29ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டம்  தொடர்பில்  இனறு காலை 10 மணிக்கு பிரதமருடன் விசேட பேச்சுவார்த்தையில் துறைமுக தொழிற்சங்கத்தினர் ஈடுப்படவுள்ளனர்.