(எம்.எப்.எம்.பஸீர்)

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் காலம்  2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் அவ்வாணைக் குழுவின் இறுதி அறிக்கை இன்று முற்பகல் 11.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம், ஆணைக் குழுவின் தலைவர் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வாவினால் கையளிக்கப்படவுள்ளது. 

ஆணைக் குழுவின் இறுதி அறிக்கையானது சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளதாகவும், சாட்சியாளர்களின்  சாட்சியங்கள் ஏனைய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணைக்கும் போது, சுமார் ஒரு இலட்சம் பக்கங்கள் வரை உள்ளதாகவும் ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவித்தன.

நேற்று மாலையாகும் போதும்,  மிக இரகசியமாக, ஆணைக் குழுவின் செயலரின் பூரண கட்டுப்பாட்டில் குறித்த அறிக்கையுடன் இணைக்கப்படும் ஏனைய ஆவணங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை  இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவொன்று கடந்த முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டது.  

1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கு  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி இவ்வாணைக் குழு நியமிக்கப்பட்டது.  

அது முதல் கடந்த மார்ச் 20, செப்டம்பர் 20, டிசம்பர் 20 ஆம் திகதிகளில் அவ்வாணைக் குழுவின் பதவிக் காலம் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால்  3 சந்தர்ப்பங்களில் முறையே 6 மாதங்கள், 3 மாதங்கள், ஒரு மாதம் என நீடிக்கப்பட்டு  ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது. 

ஆணைக் குழுவின் தலைவராக  ஆணைக் குழு நியமிக்கப்படும் போது  மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதியாகவும் தற்போது உயர் நீதிமன்ற நீதியரசராகவும் செயற்படும்   ஜனக் டி சில்வா கடமையாற்றுகின்றார்.

மேன் முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் ஆணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

அதன்படி ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் கடந்த 2019 ஒக்டோபர் 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்ப்ட்டது. முதல் சாட்சியாளராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனநாயக்க சாட்சியமளித்திருந்தார்.

 சாட்சி விசாரணைகளை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சிலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன தலைமையில், சிரேஷ்ட அரச சட்டவாதிகளான சஞ்ஜீவ திஸாநாயக்க, சுகர்ஷி ஹேரத், அரச சட்டவாதிகளான நிமேஷா டி அல்விஸ், சந்துரங்க பண்டார, திவங்க கலுதுவர, ஹரீந்ர ஜயசிங்க ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர் நெறிப்படுத்தியிருந்தனர். 

இதனைவிட ஆணைக் குழுவின் ஆரம்பம் முதல் இறுதி வரை, கத்தோலிக்க திருச்சபையின்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.

 இதனைவிட,  ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவானது ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் வெலிகன்னவின் கீழ் செயர்பட்டதுடன் அதில் பனிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த லியனகே கடமையாற்றியதுடன் மொத்தமாக 41 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

 இந் நிலையில் கடந்த 2019 ஆகஸ்ட் 31 ஆம் திகதி சாட்சி விசாரணைகளை ஆரம்பித்த ஆணைக் குழு, அன்று முதல் நேற்று சம்பிரதாய இறுதி அமர்வு வரையில் 214 நாட்கள்  கூடியது. அதன்படி 640 சந்தர்ப்பங்களில் 457 சாட்சியாளர்கள் சாட்சி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 சாட்சி விசாரணைகளை நெறிப்படுத்திய சட்ட மா அதிபர் தரப்பினரால்,  எக்ஸ் என அடையாளபப்டுத்தி 680 ஆவணங்கலும், சி என அடையாளபப்டுத்தி 1556 ஆவணங்க்ளுமக மொத்தமாக 2236 ஆவணங்கள் உதவி சாட்சியங்களாக ஆணைக் குழுவில் சமர்ப்பிக்கப்ப்ட்டன.

சாட்சியம் வழங்கிய பல சாட்சியாளர்களும், அவர்களின் பெயரின் முதல் ஆங்கில எழுத்தை அடையளமாக கொண்டு தங்கள் சார்பிலான ஆவண சாட்சியங்களை முன்வைத்திருந்தமையும்  விஷேட அம்சமாகும்.