(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இது வரையில் அவரின் நிலைப்பாட்டை கூறவில்லை. எனவே உடனடியாக அவர் தனது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

வரவு - செலவுத்திட்டத்தில் பொய் கூறுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் - எரான்  விக்கிரமரத்ன | Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிரக்கட்சி தலைவர் அலுவலகத்தில் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் இது வரையில் தெளிவானதொரு நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.

தற்போது இதன் காரணமாக அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளும் பிளவுகளும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. எனவே அவரது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

கிழக்கு முனையம் தொடர்பில் வெவ்வேறு கருத்துக்களை கூறிக் கொண்டிருக்காமல் ஸ்திரமான நிலைப்பாட்டை தெளிவாகக் கூற வேண்டும்.

ஆளுந்தரப்பின் அமைச்சர்கள் பலரும் வெவ்வேறு இடங்களில் வேறுபட்ட கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்ற நிலையில் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் சனிக்கிழமையிரவு துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்தோடு புலனாய்வு பிரிவிலுள்ள பலரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவில் பிரச்சினைக்கு அதற்கு பொறுத்தமான முறையிலேயே தீர்வு காண வேண்டும். இதற்கு இராணுவ போக்கில் தீர்வு காண்பது பொறுத்தமற்றது.

மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய தீர்வு வழங்க வேண்டும். இதன் பின்னணியிலுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் பாதுகாப்பு  பிரச்சினை என்பவற்றை தெளிவுபடுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சவாலுக்குட்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது என்றார்.