(எம்.மனோசித்ரா)

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினூடாக நீதிமன்றத்தின் அதிகாரங்கள் நிறைவேற்றுத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன. உண்மைகளை கண்டறிவதற்காக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுக்களால் தீர்ப்பளிக்கவோ தண்டனை வழங்கவோ முடியாது. அவை நீதிமன்றத்திற்குரிய பொறுப்புக்களாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

இந்த ஆணைக்குழுவினூடாக உதய கம்மன்பில, பசில் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களுக்கு பதிலாக புதிய சந்தேக நபர்களாக ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க, சம்பிக ரணவக்க, சுமந்திரன், சரத் வீரசேகர, மங்கள சமரவீர, ஷானி அபேசேகர உள்ளிட்டோர்  பெயரிடப்பட்டிருக்கிறார்கள் என்றும் எரான் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதோடு அதன் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையிலும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உண்மைகளை அறிந்து கொள்வதற்காக இவ்வாறான ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. ஆனால் இந்த ஆணைக்குழுவில் உண்மைகளை அறிந்து கொள்வதற்கான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

மாறாக வரலாற்றில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக புதிய சந்தேகநபர்களாக ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க, சம்பிக ரணவக்க, சுமந்திரன், சரத் வீரசேகர, மங்கள சமரவீர, ஷானி அபேசேகர உள்ளிட்டோர் பெயரிடப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஆணைக்குழுவின் ஊடாக நீதிமன்றத்தின் அதிகாரங்கள் நிறைவேற்றதிகாரத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது மிகப்பாரிய ஆபத்தாகும். இவ்வாறான அபாயநிலை ஜனநாயகத்தை சவாலுக்குட்படுத்தி 15 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. சந்தேக நபர்களை அல்லது குற்றவாளிகளை குற்றங்களிலிருந்து விடுவித்து அதற்கு பதிலாக புதியவர்கள் சந்தேக நபர்களாவோ அல்லது குற்றவாளிகளாகவோ பெயரிட வேண்டியது ஆணைக்குழுவின் கடமையல்ல. அவை நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டியவையாகும்.

இலங்கையில் நீதித்துறையில் சிக்கல் இல்லை. மாறாக நிர்வாகத்திலேயே குறைபாடுள்ளது. உண்மைகளை கண்டறிவதற்காக நிறைவேற்றதிகாரத்தினால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும். ஆனால் தீர்ப்பளிக்கவோ தண்டனை வழங்கவோ முடியாது. அவை நீதித்துறையின் பொறுப்பும் கடமையுமாகும். உண்மையில் அரசியல் பழிவாங்கல்கள் நடைபெற்றிருந்தால் அதற்கு நீதிமன்றத்தினூடாக தீர்வு காண்பதே பொறுத்தமானது என்றார்.