(ஆர்.ராம்)
“ஜெனிவா மார்ச் அமர்வு: படிப்பினைகளுக்கும், பெண் ஆளுமைகளின் திரட்சிக்குமான களம்”
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் மீண்டும் சர்வதேசத்தின் கரிசனை தீவிரமடைந்திருக்கின்றது. இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் ஆட்சியாளர்கள் மீது பலமுனைகளில் சுட்டுவிரல்கள் நீட்டப்பட்டுள்ளன.
பூகோள அரசியல் மாற்றம் இதற்கான ‘மையமாக’ இருக்கின்றபோதும், சிங்கள, பௌத்த தேசியவாத திளைப்பில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய ராஜபக்ஷவினரின் ‘குணாம்சங்கள் மாறாத ஆட்சியும்’ சர்வதேச கரிசனையின் தீவிரத்தன்மைக்கு மற்றொரு காரணமாகின்றது.
இந்த நிலையில் பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பித்து மார்ச் 19ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரை மையப்படுத்தியே சர்வதேசத்தின் கரிசனைகள் இவ்வாறு மேலெழுந்துள்ளன.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 30.1 தீர்மானத்திலிருந்து விலகிவிட்டோம் என்று அறிவித்தது முதல் வெளிவந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் 17பக்க அறிக்கையை நிராகரிக்கும் அறிவிப்பு வரையில் ‘எதற்கும் அடிபணியப்போவதில்லை’ என்ற ‘எதிர்மறையான’ பிரதிபலிப்புக்களையே ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
முற்போக்கு சிந்தனைகள், குறித்து ஆட்சியாளர்கள் எள்ளளவும் நெகிழ்வுத்தன்மை அற்ற நிலையில் கடைப்பிடிக்கும் தீவிர போக்குகளால் ‘ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், சமூக விழுமியங்களையும், சட்ட ஆட்சியையும், பொறுப்புக்கூறலையும்’ நிலைநாட்டுவதற்காக இம்முறை அவர்களுடன் முட்டி மோதிக் கொண்டிருப்பவர்கள் ஆறு பெண்மணிகளாவர்.
அந்த அறுவரும், அண்மைய நாட்களில் ஆட்சியாளர்களின் ‘பிற்போக்குவாத’ மற்றும் ‘நேர்மறையான’ செயற்பாடுகளுக்கும், வெளிப்பாடுகளுக்கும் எதிராக பகிரங்கமாகவே கருத்துக்களை வெளியிட ஆரம்பித்திருப்பதோடு செயல் ரீதியான பிரதிபலிப்புக்களையும் செய்யாமலில்லை.
இதனால், அடக்குமுறைக்குள் அல்லல்பட்டு, மீட்பர்கள் மட்டுமல்ல ஆறுதல் அளிப்போருமின்றி, நீதிக்காக அங்கலாத்துக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இந்த அறுவரும் தமது ‘குரல்களாகவும்’ நீதிபெற்றுதரும் ‘தேவதைகளாகவும்’ உருவகப்படுத்தப்பட்டு தெரிகின்றனர்
மறுபக்கத்தில், இந்த அறுவரும் தமக்கான ‘தலைவலியை அளிக்கும் காரணிகளாகவே’ ஆட்சியாளர்களால் பார்க்கப்படுகின்றனர். அதுமட்டுமன்றி இந்த அறுவரையும் பொருட்டாக கொள்ளாத போக்கும் “இந்தப் பெண்களால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மக்கள் ஆணை உள்ள எம்மை என்ன செய்து விட முடியும்” என்ற ஏதேச்சதிகாரப் போக்குமே வெளிப்பட்டிருக்கின்றது.
ஆட்சியாளர்களின் இந்த மனோநிலையை, “மிஷன் இம்பொசிபிள் -ஜெனிவா: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் எதிர் -மேலாதிக்க சமச்சீரற்ற இராஜதந்திரம்” என்ற நூலின் ஆசிரியர் சஞ்சனா டி சில்வா ஜயதிலக்க (கலாநிதி.தயான் ஜயதிலக்கவின் துணைவியார்) பின்வருமாறு விபரிக்கின்றார்.
“போரில் நேரடியாக பங்கேற்ற, போர் வெற்றிவாத மனேநிலை உடைய படை அதிகாரிகள் அரசாங்க நிர்வாகத்தில் இருக்கின்றமையானது, ஆட்சியாளர்களில் ஆணாதிக்க சிந்தனையை அதிகமாக வெளிப்படுத்தியுள்ளது. இதனால், ஜனநாயகம், மனிதாபிமானம் சம்பந்தமான உரையாடல்களைச் செய்யும் எந்தவொரு பெண்களையும் அவர்களின் ஆளுமைகளையும் குறைத்தே அவர்கள் எடைபோடுகின்றார்கள்” என்று கூறுகிறார்.
இவ்வாறிருக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள மீளாய்வு அறிக்கையில், கடந்த காலத்தில் அரசாங்கத்தின் தவறுகள், மனித உரிமை மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றமை, சித்திரவதைகள், இராணுவ மயமாக்கலால் ஏற்படும் எதிர்கால ஆபத்துக்கள் என்று பல விடயங்களைக் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவற்றில் மிக முக்கியமாக இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள்’ முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறில்லையேல் சர்வதேச நாடுகள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியிருக்கின்றார்.
அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்படும், படை அதிகாரிகளுக்கு எதிராக பயணத் தடை விதிக்கவும், சொத்துக்களை முடக்கவும், அவர் பரிந்துரை செய்திருக்கின்றார்.
இந்த விடயத்தில் அவர் மிகத்தீவிரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியமைக்கு இலங்கையில் காணப்படும் நிலைமைகள் மற்றும் சான்றாதாரங்கள் என்பதற்கு அப்பால் யதார்த்தத்தினை புரிந்துகொள்ளத்தக்க அவருடைய தனிப்பட்ட அனுபவங்களும் உள்ளன.
‘வெரோனிக்கா மிச்செல் பச்லெட் ஜெரியா’ என்பது உயர்ஸ்தானிகரின் இயற்பெயர். இவரின் பூர்வீகம் சிலி. சிலியின் ஜனாதிபதியாக இரண்டு தடவைகள்(2006-2010,2014-2018) பதவி வகித்தவர். சிலியின் முதல்பெண் ஜனாதிபதி, உலகில் வலிமையான பெண்களில் 27ஆவது இடம் என்ற பெருமைகளை கொண்டிருப்பவர்.
இவரின், தந்தையார் விமான படையில் ஜெனரலாக பதவி வகித்தவர். சிலியின் ஜனாதிபதியாக அகஸ்டோ பினோசேயை பதவிக்கு கொண்டுவருவதற்காக, கொண்டுவந்தமைக்காக இராணுவத்தின் செயற்பாடுகளை எதிர்த்தமையால் 1973இல் இவருடைய தந்தை கைது செய்யப்பட்டு படையினரால் மாதக்கணக்கில் துன்புறுத்தப்பட்ட நிலையில் 1974இல் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த சம்பவம், இலங்கையில் படைகளின் துன்புறுத்தல்கள், சித்திரவதைகள் எவ்விதமானவை என்பதை புறச் சக்தியொன்று அவருக்கு கூறி விளங்க வைக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தாததாக உள்ளது. தந்தையின் மரணத்தோடு ஏற்பட்ட அச்சுறுத்தலால் சிலியிலிருந்து வெளியேறிய அவர் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் உயர்கற்கைகளை நிறைவு செய்துகொண்டு மீண்டும் நாடு திரும்பினார். ஆரம்பத்தில் சுகாதார, இராஜதந்திர ஆலோசகர் ஆகிய பதவிகளை வகித்தார்.
சிலி சோசலிச கட்சியின் ஊடாக அரசியலில் ஈடுபட்டார். 2002இல் பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்று நான்கு ஆண்டுகள் அதில் நீடித்தார். ஏற்கனவே தந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்த படைத்தரப்புகளுடன் கொண்டிருந்த ஊடாட்டம் அவற்றின் குணாம்சத்தை அவருக்கு நன்றாகவே உணர்த்தியிருக்கும்.
ஆகவே தான் இலங்கை போரின் போது படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக தீவிர கரிசனையை அவர் வெளிப்படுத்தியுள்ளதோடு அரச நிர்வாகத்தில் உள்ளீர்ப்பதால் ஏற்படும் ஆபத்துக்களையும் வெளிப்படையாகவே எச்சரித்திருக்கின்றார்.
அனைத்து விதமான மீறல்களிலும் மோசமாக ஈடுபட்ட சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அகஸ்டோ பினோசேவுக்கு (உயர்ஸ்தானிகரின் தந்தையின் மரணத்திற்கும் காரணமானவர்) பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் 1990களின் பின்னர் பயணத்தடையை அறிவித்திருந்தன.
அந்த அறிவிப்பின் அடிப்படையில் அகஸ்டோ பினோசே 1998இல் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் ஸ்பெயினிடம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தார். இந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் உயர்ஸ்தானிகர், இலங்கையில் நடைபெற்ற மீறல்களுடன் தொடர்புபட்ட படையினருக்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கின்றார்.
அதனைவிட, ரோம் சாசனத்தில் கையொப்பமிடாத இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவது கடினமானது என்று நியாயமான காரணங்களை முன்வைத்து விவாதிக்கப்படுகின்றது. பாதுகாப்புச் சபை ஊடாக இலங்கையை கொண்டு செல்ல முயன்றாலும் சீனா, ரஷ்யாவின் ‘வீட்டோ’ அதிகாரத்தின் மூலம் ‘செக்’ வைத்துவிடும் நிலையே அதிகமுள்ளது.
அவ்வாறான நிலையிலும் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் பாதுகாப்புச் சபை ஊடாக முடியாது விட்டால், சர்வதேச நாடுகள் அதனை பரிந்துரைக்க வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத்தொடுநர்களால் தனி நபர்களால் இழைக்கப்பட்ட குற்றங்களை மையப்படுத்தி வழக்குகளைத் தாக்கல் செய்யமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அடுத்து, இலங்கையின் அத்தனை ஆட்சியாளர்களினதும் தவறுகளை சுட்டிக்காட்டி நெருக்கடிகளை அளித்து வருபவர் இந்தியப் பூர்வீகத்தினைக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி. இவருக்கு குஜாராத்தில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பான ஆய்வு மற்றும் விசாரணைகளில் பங்கேற்ற அனுபவம் நன்றாகவே இருக்கிறது. அத்துடன் தெற்காசிய பிராந்தியம் பற்றிய பூரணமான புரிதலும் உள்ளது.
அதனால் இலங்கையின் இன முரண்பாடுகளை ஆழமாக புரிந்து கொள்வதில் எவ்விதமான சிக்கல்களும் இவருக்கு இருக்காது. விசேடமாக பெண்கள் உரிமைகள், பாலியல் வன்கொடுமைகள், மத உரிமைகள் தொடர்பிலிலும் இவருக்கு தனிப்பட்ட கரிசனைகளும் அதிகமுள்ளன.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கி வருகின்றது. தற்போது அமெரிக்காவில் மனித உரிமைகள், ஜனநாயக பண்புகளில் கரிசனை கொண்ட ஆட்சியாளர்கள் ஆட்சியினைப் பொறுப்பேற்றிருப்பது இந்த அமைப்பின் வெளிப்பாடுகளுக்கும், சுட்டிக்காட்டல்களுக்கும் அதிகளவில் செவிசாய்க்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
அடுத்து இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு தொடர்ச்சியாக குடச்சலை கொடுத்துக்கொண்டிருப்பவர் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளராக இருக்கும் யஸ்மின் சூக்கா. இவர் தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு, ஐ.நா.வின் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பான அறிக்கை தயாரிப்பின் நிபுணர்குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் கடமை ஆற்றியவர்.
இவர், இலங்கை விடயத்தினை கையிலெடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றார். இலங்கையில் போர்க்குற்றங்களை இழைத்த படை அதிகாரிகள் தொடர்பாக தனித்தனியான கோப்புக்களை தயாரித்து வருகின்றார். போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, வலிந்து காணாமலாக்கல், சித்திரவதைகள் உள்ளிட்ட விடயங்களில் சாட்சியத் திரட்டுக்களை செய்து கொண்டுமிருக்கின்றார்.
ஜனாதிபதி கோட்டாபயவின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆதாரத்திரட்டையும், அவரைச் சூழ்ந்துள்ளவர்கள் மற்றும் சிவில் நிர்வாகத்தில் இராணுவ மயமாக்கல் தொடர்பான தரவுகளையும் சேகரித்து வெளிப்படுத்தி வருகின்றார். இவற்றை எதிர்வரும் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அவர் ஏலவே எடுத்துமிருக்கின்றார். இந்த ஆவணங்கள் அரசாங்கத்திற்கு புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தாது விடப்போவதில்லை.
ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஹனா சிங்கர். கடந்த காலத்தில் இலங்கையில் ஐ.நா.நிரந்தரவதிவிட பிரதிநிதி, அரசியல் விஞ்ஞானத்துறை இளமானி, அரசியல் சமூகவியல் முதுமானி பட்டங்களை கொண்டிருக்கும் இவர் மூன்று தாசப்த காலத்திற்கும் அதிகமான அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார். சிரியா, நேபாளம், கஜகஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றி உள்ளார். புருண்டி மற்றும் ஹைட்டியில் மனிதாபிமான திட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளதோடு, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் எல்லை தாண்டிய மனிதாபிமான நடவடிக்கைகளையும் நிருவகித்திருக்கின்றார்.
இத்தகையவர், இலங்கையில் பதவிநிலையைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து, ஐ.நா.அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தினை தாமதங்களின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஆட்சியில் உள்ளவர்களைப் ‘பகைத்துவிடக்கூடாது’ என்பதால் அமைதி காத்து வந்திருக்கின்றார் போலும். ஆனால் அண்மைய நாட்களில் மௌனம் கலைத்துவிட்டார்.
பயங்கரவாதச் சட்டத்தின் ஆபத்துக்கள் மற்றும் அதனால் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு இடமளிக்க முடியாது என்பதுள்ளிட்ட விடயங்களையும் அரசாங்கத்தின் ஜனாஸாக்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்தம் தீர்மானத்திற்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதனைவிடவும், தமிழ்த் தரப்பின் பிரதிநிதிகளை சந்தித்து “தேவையானவற்றை’ பெற்றும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. இவை, ஐ.நா.வின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்களிலும் கனதியான தாக்கத்தினைச் செலுத்துமென்று நம்பிக்கையுடன் கருத முடியும். அடுத்து இலங்கை மற்றும் மலைதீவுக்கான அமெரிக்க தூதுவராக இருப்பவர் அலெய்னா டெப்லிஸ். இவர் 1991ஆம் ஆண்டு முதல் இராஜாங்கத் திணைகளத்தில் இணைந்து பணியாற்றி வருவதோடு நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட செயற்றிட்டங்களில் பங்கேற்றவராகவும் உள்ளார்.
அத்துடன் கிழக்கு மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களையும் கையாண்டுள்ளார். இதில் உள்நாட்டு முரண்பாடுகளும் சட்ட மீறல்களும் நிறைந்தே காணப்படும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விடயங்களிலும் ஈடுபட்டவராக உள்ளார். அத்தகையவர், 2018 ஒக்டோபர் 22இல் தற்போதைய பதவிநிலையை ஏற்றுக்கொண்டார். இவர் இலங்கையில் காலடி பதித்து நான்கு தினங்களிலேயே அரசியலமைப்பு நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தன. பின்னர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தொடர்ச்சியாக, அமெரிக்காவுடன் எம்.சி.சி மற்றும் சோபா உடன்படிக்கை விடயங்களை கைச்சாத்திடுவது தொடர்பில் புதிய ஆட்சியாளர்களுடன் இவருக்குச் செயற்பட வேண்டியிருந்தது.
ஆனால் ஆட்சியாளர்களின் எதிர்வினைகளுக்குள் இவரால் நின்றுபிடித்திருக்க முடியவில்லை. இராஜங்கச் செயலாளரை இலங்கைக்கு வருவிக்க வேண்டியிருந்தது. அவ்வளவு தூரம் நிலைமைகள் மோசமடைந்திருந்தன. அப்போது தனது ‘பிடி’ தளர்த்தப்பட்டதை உணர்ந்தவர் சுதாகரித்துக்கொண்டு இப்போது அதனை இறுக்கியிருக்கின்றார்.
கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஐ.நா.வில் புதிய பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்றும் உள்ளடக்கங்களை தயார்படுத்துமாறும் முதலில் தூபமிட்டவர் இவர் தான். அதன் பின்னரான நாட்களில், அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து புதிய ஆட்சியாளர்கள் பதவி ஏற்கவும், இலங்கை விடயத்தில் கடும்போக்கை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். சிக்கலில் இருக்கும் கொழுபுத்துறைமுக கிழக்கு முனையம் முதல் புதிய ஜனாதிபதி பைடனின் ஆட்சியிலும் இலங்கை மீது அழுத்தங்களை அளிப்போம் என்று பகிரங்கமாக உரைத்திருக்கிறார்.
கடந்தவாரம் செய்தியாளர் குழுவைச் சந்தித்த இவர், இலங்கை அளித்த வாக்குறுதிகள், புதிய ஆணைக்குழு நியமனம், ஜனாஸா தகனம் என்று அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிர்மறையான நிலைப்பாட்டையே பிரதிபலித்திருக்கின்றார். இது அமெரிக்காவும், தூதுவர் அலெய்னாவும் இலங்கை விடயத்தில் கொண்டிருக்கும் ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உறுப்புரிமையைக் கொண்டிருக்காது விட்டாலும், இணை அனுசரணை நாடுகள் கொண்டுவரும் இலங்கை குறித்த புதிய பிரேரணை மற்றும் அதனை நிறைவேற்றுதவற்கான அனைத்துச் செயற்பாடுகளிலும் நேரிடையாக பங்கேற்பது நிச்சயமானது.
2009களில் இலங்கை தொடர்பில் இலங்கை தொடர்பில் பிரேரணையொன்று கொண்டுவரப்படுவதற்கு அப்போது தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் செலுத்திய செல்வாக்கும் பாதிக்கப்பட்ட தரப்புக்களை கையாண்டமையும் வெளிப்படையானது. கடந்த கால அமெரிக்க தூதுவர்கள் அவ்விதமாக செயற்பட்டிருக்கையில் தற்போதைய தூதுவரின் செயற்பாடுகளும் வழிதவநாதாதகவே இருக்கும்.
இறுதியாக, இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன். பொதுநலவாய நாடுகள் அலுவலகம், கொரியா ஆகியவற்றில் முன் அனுபவத்தினைக் கொண்டிருக்கும் இவர் 2015ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் சேவையாற்றி வருகின்றார். 2019ஆண்டு ஜேம்ஸ் டொறிசுக்கு பின்னர் பதவியினை ஏற்றுக்கொண்டவர். இவருடைய நகர்வுகள் பெரும்பாலும் அமைதியானவையாகவே இருந்தன.
ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் பிரித்தானிய பாராளுமன்றின் சுவரில் கார்த்திகை பூ ஒளியூட்டப்பட்டமைக்காக இவரை அழைத்து வெளிவிவகார அமைச்சர் நேரடிக் கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது ‘இலங்கை, பிரித்தானிய இருதரப்பு உறவுகள் பாதுகாக்கப்படும்’ என்ற இராஜதந்திர மொழியலை மட்டுமே பிரதிபலித்திருந்தார்.
அத்தகையவர், தற்போது, பொதுவெளியில் கருத்துக்களை பகிர ஆரம்பித்து விட்டார். ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்றமை, முஸ்லிம்களின் ஜனாஸா தகனத்திற்கான கண்டனம் என்று டுவிட்டரில் இவரின் பதிவுகள் தாராளமாகிவிட்டன.
இலங்கை தொடர்பாக அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரில் கொண்டுரப்படவுள்ள பிரேரணைக்கான தலைமையை பிரித்தானியாவே வகிக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய நிலையில் சர்வதே அரங்கொன்றில் கையிலெடுக்கும் முதல் விடயம் இலங்கை தொடர்பான ஐ.நா.பிரேரணையே.
முதல் விடயத்திலேயே பின்னடைவுகளைச் சந்திப்பது பிரித்தானியாவின் ‘சுயகௌரவத்துடன்’ தொடர்புடைய விடயம். எனவே அவ்விதமான நிலைமைகளை தவிர்ப்பதற்கே பிரித்தானியா அதிகம் விரும்பும். அதற்காக பிரித்தானியா பிரேரணையை வலுப்படுத்தவும் அதனை இலகுவாக நிறைவேற்றவும் நிச்சயம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொள்ளும். அவ்விதமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கையில் பணியாற்றும் சாரா ஹல்டன் முதுகெலும்பாகவே நிச்சயம் இருந்திருப்பார். இனியும் இருக்கவுள்ளார்.
ஆக, இந்த ஆறு பெண்களினதும், ஆளுமைகளின் திரட்சியான தளமாகவே இம்முறை ஜெனிவா அரங்கு காணப்படப்போகின்றது.
ராஜபக்ஷவினரின் கடந்த ஆட்சிக்காலத்தின் போது மீறல்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை முதலில் கையிலெடுத்தவர் அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளராக இருந்த மெடலின் அல்பிரட் என்ற பெண்மணியே. அதன் பின்னர் இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் விடயங்களை வெவ்வேறு தளங்களில் கையாண்டவர்கள் அல்லது செல்வாக்குச் செலுத்தியவர்கள் அதிகமாக பெண்களாகவே உள்ளனர்.
ரோஸ்மேரி டிகார்லோ, எலைன் டொனாஹோ, நிஷா தேசாய் பிஷ்வால், பாட்ரிசியா ஏ. புட்டெனிஸ், ஹிலாரி கிளிண்டன், நிக்கி ஹேலி, விக்டோரியா நூலண்ட், நவநீதம்பிள்ளை, சமந்தா பவர், சுஷ்மா சுவராஜ் என்று இந்தப்பட்டியல் நீண்டு செல்கிறது.
அந்த வகையில், ‘போர் வெற்றி வாதம்’ தசாப்தம் கடந்தும், அனைத்தையும் தோற்கடிக்கும் என்ற ‘குறுகிய’ சிந்தனை வாதத்திற்குள் சிறைப்பட்டிருக்கும் ஆட்சியாளர்கள் இலங்கை விடயங்களை இம்முறை கையிலெடுத்திருக்கும் ஆறு பெண் ஆளுமைகள் மீதான குறைமதிப்பீடு ஜெனிவா அரங்கில் தக்க படிப்பினையை வழங்கும் என்பது கசப்பான உண்மை தான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM