(எம்.மனோசித்ரா)
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை விற்பதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியில் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் 5 பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு தொலைபேசியூடாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்த கலந்துரையாடல் அவரது இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சியின் பொது செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் ஜீ.வீரசிங்க, ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ண, ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விரான் அலஸ் ஆகியோருக்கே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.