சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'டான்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

தெலுங்கில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரியங்கா அருள் மோகன், தமிழ் திரைஉலகில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகும் 'டாக்டர் ' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் வெளியாகும் முன்னரே அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்நிலையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் தயாராக இருக்கும் 'டான்' என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா அருள்மோகன் மீண்டும் தெரிவாகி இருக்கிறார்.

நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், அவர் அறிமுகமாகும் படத்தின் நாயகனுடன் மீண்டும் இணைந்து நடித்திருப்பது திரையுலகில் சக நடிகைகளின் புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்தி இருக்கிறது.

நடிகை பிரியங்கா அருள் மோகனின் எளிமை, நடிப்பின் மீதான அர்ப்பணிப்பு, தொழில் பக்தி.. போன்றவையே அவருக்கு மீண்டும் வாய்ப்புகளை பெற்றுத் தந்திருப்பதாக திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.