(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் பௌத்த மதத் தலைவர்கள் ஒருமித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.  தனி சிங்கள தலைவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க பௌத்த தேரர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள். எனவே அரசாங்கம் பௌத்த தேரர்களின் கருத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தேசிய வளங்களை பாதுகாப்போம், பிற நாட்டவர்களுக்கு அவற்றை தாரைவார்க்க மாட்டோம் என்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் பிரச்சாரமாக தேர்தல் காலங்களில் காணப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இவ்விடயங்களை தனது கொள்கைத்திட்டத்தில் வெளியிட்டார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு பேசப்படும் விடயமல்ல. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்தில் இருந்து இவ்விடயம் பேசப்படுகிறது.

கிழக்கு முனைய விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் பிரதான பேசுப்பொருளாக காணப்படுகிறது. இவ்விடயத்தை கொண்டு அரசாங்கத்திற்குள் பல அரசாங்கங்கள் தோற்றம் பெற்றுள்ளன. அமைச்சர்கள் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை அரசாங்கத்தின் கருத்தாக ஊடங்களில் தெரிவிக்கிறார்கள். இவ்விடயம் அரசாங்கம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

பௌத்த மத தலைவர்கள் தங்களின் நிலைப்பாட்டை அரசாங்கத்துக்கு ஒருமித்து அறிவிக்க  வேண்டும். பீட அடிப்படையில் பௌத்த தேரர்களிடம்  வேறுப்பட்ட நிலைப்பாடு காணப்படலாம். ஆனால் நாடு என்ற ரீதியில் ஒருமித்த கொள்கை காணப்படுகிறது. தனி சிங்கள தலைவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க பௌத்த தேரர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள். ஆகவே அரசாங்கம் பௌத்த தேரர்களின் கருத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் அரசியல்வாதிகள் தங்களின் தனிப்பட்ட கருத்தினை தெரிவிப்பதை முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்விடயம் குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுடன் கலந்துரையாட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மகாநாயக்க தேரர்களுடாக முன்னெடுத்துள்ளோம் என்றார்.