(இராஜதுரை ஹஷான்)

இனப்பிரச்சினைக்கு தீர்வாக சர்வ கட்சி தலைவர் குழு எடுத்த தீர்மானங்களை உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான குழுவினரிடம்  லங்கா சமசமாஜ கட்சி சார்பில் முன்வைக்கவுள்ளோம்.

சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய இனங்கள் மத்தியில் உள்ள அடிப்படைவாதிகளையும் இனவாதிகளும் தூண்டிவிட்டு அரசியல்வாதிகள் ஆட்சியை கைப்பற்றிக் கொள்கிறார்கள்.

இந்த நிலை மாற்றமடைந்தால் மாத்திரமே நாடு முன்னேற்றமடையும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு, தமிழ் தரப்பினரது கோரிக்கை ஆகியவை குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பல்லின சமூகம் வாழும் நாட்டில் ஒரு இனத்தின் உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக முடக்கப்படும் போது அங்கு  பிரிவினைவாதம் தோற்றம் பெறும் என்பதற்கு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு சிறந்த எடுத்துக்காட்டாகும். தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு மாத்திரமல்ல அதற்கு முற்பட்ட கால அரசியலமைப்புக்கள் கூட முரண்பட்ட தன்மையிலும், பிற இனத்தின் உரிமைகளை முடக்கும் வகையிலும் காணப்பட்டன.

30 வருட கால சிவில் யுத்தம் தோற்றம் பெறுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். தவறான நிர்வாகம், எல்லை மீறிய அதிகார பிரயோகங்கள் என்பன விடுதலை புலிகள் அமைப்பு தோற்றம் பெறுவதற்கு பிரதான காரணியாக அமைந்தது. பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டன. இதற்கு சர்வதேச நாடுகளின் சுய நல போக்கும் ஒரு காரணியாக இருந்தது.

நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்றார். அக்காலக்கட்டத்தில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வுக்கு கொண்டு வர முடியாத அளவிற்கு யுத்தம் உக்கிரமடைந்திருந்தது. விடுதலை புலிகள் அமைப்பினை தோற்கடிக்கும் போது அப்பாவி தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்று அவர் விஷேட ஆலோசனைகளை படைகளுக்கு வழங்கினார்.

இனங்களுக்கு மத்தியில் புரையோடிபோயிருந்த இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய தேவை காணப்பட்டது. 1997 மற்றும் 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சர்வகட்சி தலைவர்  குழு   கூட்டம்   இடம்பெற்றது. பாராளுமன்றத்தை அங்கிகரித்த அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வ கட்சி கூட்டத்தில் பங்குப்பற்றின. தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துக் கொள்ளவில்லை. 20 தொடக்கம் 25 வரையான கூட்டங்கள் இடம்பெறும் போது அதிகார பகிர்வு குறித்து பேசப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி சர்வ கட்சி தலைவர் கூட்டத்தில் இருந்து வெளியேறியது.

சர்வகட்சி தலைவர் குழுவின் அறிக்கை யுத்தம் முடிவடைந்ததுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட்டது. மாகாண மட்டத்தில் முழுமையான அதிகார பகிர்வு,உள்ளுராட்சி மன்ற மட்டத்தில் அதிகார பகிர்வு மற்றும் இனங்களுக்கிடையிலான சம அதிகார வழங்கல் என்ற பிரதான மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. இவற்றை அக்காலக்கட்டத்தில் செயற்படுத்த உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தின.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக சர்வகட்சி குழுவின் தீர்மானங்களை செயற்படுத்துவது பொறுத்தமாக அமையும் என்பதே  லங்கா சமசமாஜ கட்சியின் நிலைப்பாடாகும். உத்தேச புதிய அரசியலமைப்பின்  நிபுணர் குழுவிடம் இவ்விடயங்களையே முன்வைப்போம். இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காண்பது அவசியமாகும்.

மூன்று இன மக்கள் மத்தியிலும் அடிப்படைவாதிகளும் இனவாதிகளும் உள்ளார்கள். இவர்களை அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் தூண்டிவிட்டு ஆட்சியை கைப்பற்றிக் கொள்கிறார்கள். இந்த நிலைமை மாறினால் மாத்திரமே நாடு முன்னேற்றமடையும். வரலாற்று ரீதியில் செய்து கொண்ட தவறுகளை இம்முறை திருத்திக் கொள்வது கட்டாயமாகும் என்றார்.