(நா.தனுஜா)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்ற தீர்மானத்தைத் தத்தமது நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்வதற்கான உரிமை அனைத்துப் பிரஜைகளுக்கும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தியிருக்கிறது.

அமெரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவிற்கு ஐக்கிய அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிரிஸ் வன் ஹொலென் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை மக்களின் நீண்டகால நண்பன் என்ற அடிப்படையில் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். அதுமாத்திரமன்றி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யும் இலங்கையின் கொள்கைக்கு விசனத்தை வெளியிட்டுள்ளவர்களின் சார்பிலும் இக்கடிதத்தை எழுதுகின்றேன். 

சடலங்களைத் தகனம் செய்வதென்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளுக்கு முரணானது என்பதுடன், இது இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் துன்பத்தை அதிகரித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் இஸ்லாமிய மதமுறைப்படி இறுதிச்சடங்குகளை மேற்கொள்வதற்கான உரிமை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்தல் மற்றும் அடக்கம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீரால் தொற்று ஏற்படலாம் என்று இலங்கையின் சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை, மனித உரிமை மீறலுக்கு வழிவகுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். அதுமாத்திரமன்றி உடல்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதை உடனடியாக நிறுத்துமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒருவரின் மரணத்தின் பின்னரான கௌரவமும், அவரது மதநம்பிக்கைகளின் அடிப்படையிலான சடங்குகளும் அவரது குடும்பத்தினரின் உணர்வுகளும் மதிக்கப்படுவதும் பாதுகாக்கப்படுவதும் அவசியமாகும். எனவே தமது மதநம்பிக்கையின் அடிப்படையில் இறுதிச்சடங்கு முறையைத் தெரிவுசெய்வதற்கான உரிமை அனைத்து இலங்கைப்பிரஜைகளுக்கும் உறுதிசெய்யப்பட வேண்டியது அவசியமாகும்.